அரியலூரில் கோடை வெயிலில் இருந்து விடுபட வேண்டி விநாயகர் ஆலயத்தில் சாமி சிலைக்கு தண்ணீர் தொட்டியும், ஷவர் குளியலுமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தி வருகின்றனர். மருத்துவர்களும் உடலைக் குழுமையாக வைத்துக் கொள்ள இயற்கையான பழச்சாறுகளை அருந்த வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்து வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில மாவட்டங்களில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வறட்சி மாவட்டமான அரியலூரிலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விநாயகர் சிலையைச் சுற்றிலும் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் வெட்டிவேர், பன்னீர், திரவிய பொடிகளைக் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசித்து வெயில் கொடுமை குறைய வேண்டும் என வேண்டுதல்களை வைத்து வழிபடுகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...