டெபாசிட் பணத்தை திருப்பித் தர முடியாது... ரங்கராஜன் நரசிம்மன் வழக்கில் உயர் நீதிமன்றம் கெடுபிடி!


ரங்கராஜன் நரசிம்மன்

"கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மனின் நேர்மைதன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திரும்ப அளிக்க முடியும்" என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியம்மிக்கபடும் வரை நிர்வாக பணிகளை கவனிக்க தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல கோயில்களில் இது போன்ற நியமனங்கள் உள்ளது. இது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு நியமிக்கப்படும் தக்கார் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்டோராக இருக்கின்றனர். இவ்வாறு நியமிக்க இந்து அறநிலைய துறை சட்டத்தில் இடமில்லை.

ரங்கராஜன் நரசிம்மன்

கோயிலை நிர்வகிக்க அறங்காவலர் தான் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தக்கார்களை அறநிலையத்துறை நியமிப்பது சட்டவிரோதம். கோயில்களை அறநிலையத் துறை நேரடியாக நிர்வாகிக்க முடியாது' எனவும் தெரிவித்திருந்தார். மேலும், அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்திருந்தார்.

இந்த 7 வழக்குகளுக்கும் மனுதரார் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் தலா 50 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாரயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, "எனது மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளபட்டுள்ளதால் வழக்கின் உண்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் செலுத்திய 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திரும்ப அளிக்க வேண்டும்" என்று கோரினார்.

அதற்கு, "மனுவை இன்னும் அனுமதிக்கவில்லை. எதிர் தரப்பில் பதில் அளிக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது. எனவே வழக்கில் உங்களின் நேர்மை தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப அளிக்க முடியும்" என்று தெரிவித்த நீதிபதிகள், "தற்போதைக்கு பணத்தை திரும்ப அளிப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" என மறுத்துவிட்டனர்.

x