13,000 கி.மீ ஆன்மிகப் பயணம்... சிவாலயங்களை தரிசிக்க நாயுடனே நடந்துவரும் உ.பி பக்தர்!


யாதிகவுர்

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவர் இந்தியாவில் உள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசிப்பதற்காக தனது நாயுடன் பாதயாத்திரை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிவாலயம்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் யாதிகவுர் (27). இவர் இந்தியாவில் உள்ள சிவாலயங்களை நடை பயணமாகவே சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதற்கு துணையாக தனது வளர்ப்பு நாயையும் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள சிவாலயங்களை தரிசிக்க மொத்தம் 13 ஆயிரம் கி.மீ. பயணம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தனது பயணத்தை திட்டமிட்டுள்ளார்.

தனது வளர்ப்பு நாய் பட்டருடன் கடந்த 2022 நவ.1ல் பத்ரிநாத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் வழியாக தற்போது தமிழகம் வந்துள்ளார். வழி நெடுகிலும் உள்ள சிவாலயங்களில் தரிசனம் செய்தவர் நேற்று ராமேஸ்வரம் வந்தார். அங்கு ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டவர் அங்கிருந்து புறப்பட்டு வழியில் உள்ள சிவாலயங்களை தரிசித்துவிட்டு கர்நாடகத்திற்கு செல்ல இருக்கிறார்.

ராமேஸ்வரம் கோயில்

கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் சென்று இறுதியாக பயணம் தொடங்கிய பத்திரிநாத்தில் பாதயாத்திரையை முடிக்க உள்ளார். மொத்தம் 13,000 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதயாத்திரை பயணத்தை இரண்டரை ஆண்டுகளில் முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

"பயணம் தொடங்கி ஒராண்டு கடந்துவிட்ட நிலையில் தனக்கு எந்தவித அயர்ச்சியும் சோர்வும் ஏற்படவில்லை, வழி நெடுகிலும் உள்ள மக்கள் தன்னை அன்புடன் வரவேற்று பாதுகாக்கிறார்கள். அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளையும் எளிதாக கடந்து எனது ஆன்மீக பயணத்தை வெற்றிகரமாக முடிப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x