நாடு நல்லா இருக்கணும்... 67 வயது முதியவர் சபரிமலைக்கு சைக்கிள் பயணம்!


ராஜேந்திரன்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருவது வழக்கம்.

இந்த கோயிலுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து, கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் காலை, மாலை என இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளித்து விரதம் இருந்து கோயிலுக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

ராஜேந்திரன்

பக்தர்கள் வாகனங்களில் வருவது மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து சபரிமலைக்கு வருவதும் உண்டு.

அந்தவகையில் நாட்டில் ஒற்றுமை ஏற்படவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும், ஐயப்பன் மீதுள்ள பற்றின் காரணமாகவும் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை சேர்ந்த 67 வயதான ராஜேந்திரன் என்ற முதியவர் சைக்கிளில் சபரிமலை கோயிலை அடைந்து, ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

சபரிமலை கோயில்

வந்தவாசி முதல் சபரிமலை வரை சுமார் 500 கிமீ தொலைவு உள்ள போதிலும் சைக்கிளில் 5 நாட்களுக்குள் கடந்து விடுவதும், தற்போது 3வது ஆண்டாக சைக்கிளில் சபரிமலைக்கு செல்லும் பயணத்தை மேற்கொண்டு வருவதும் ஆன்மிகவாதிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சைக்கிளில் தனக்கு தேவையான உணவு மற்றும் சைக்கிள் பழுதுபார்ப்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் உடன் சுமந்தபடி சென்று, சபரிமலை ஐயப்பனை தரிசித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு தன்னுடைய சைக்கிளில் திரும்புவதை வழக்கமாக வைத்துள்ள முதியவர் ராஜேந்திரனை வழியில் சந்திப்போர் பலரும் வாழ்த்தி அனுப்பி வைக்கின்றனர்.

x