கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை ஆழ்வார்புரம் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது.
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வைகை அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் தற்போது மதுரை ஆழ்வார்புரம் தடுப்பணைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதை அழகர் வேடமணிந்து பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் வைகை ஆற்றுப் படுகையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்கும் என நம்பப்படுகிறது.
இதனிடையே ஆற்றில் உள்ள கழிவுகளை நீக்கும் பணிகளில் மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதி தொடங்கி ஓபுளா படித்துறை பாலம் வரை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை ஆற்றில் வீச வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.