சபரிமலை ஐயப்ப கோயில் மண்டல பூஜைக்குப் பிறகு புதன்கிழமை இரவு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கோயில் நாளை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

கார்த்திகை முதல் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக கடந்த புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:30க்கு தீபாராதனை,புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜை நிறைவு பெற்று 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி, மூலவரை திருநீறால் மூடி யோக நிலையில் அமர்த்திய பின்னர் நடை அடைக்கப்பட்டது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான போர்டு மற்றும் போலீஸாரும் திணறினர். இந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
மகரஜோதி தரிசனம் காண அதிகளவில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் போர்டு செய்து வருகிறது.
மகர விளக்கின் முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!