சுசீந்திரம் கோயில் பிரகார மண்டப மேல்தளத்தில் பழுதான தரை ஓடுகள்: சீரமைப்பு எப்போது?


கோயில் பிரகார மண்டப தளத்தில் தரை ஓடுகள் உடைந்து மழை நேரத்தில் ஒழுகும் நிலையில் பழுதாகி காணப்படுகிறது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆண்டு தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து தாணுமாலய சுவாமியையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு செல்கின்றனர்.

இங்கு கோயில் பிரகார மண்டபத்தின் பரந்த மாடி தளத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் தரை ஓடுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் தரை ஓடுகள் உடைந்து பல இடங்களில் மழை நேரங்களில் பிரகார மண்டபத்தில் தண்ணீர் ஒழுகி வருகிறது. ஆனால் அதுபோன்று பழுதான பகுதிகளை சீரமைத்து தரை ஓடுகள் பதிக்கவில்லை. இங்கு தரை ஓடுகள் அமைத்து 40 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மழை, வெயில் என இயற்கை சூழலை எதிர்கொண்டு தரை ஓடுகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஓடைந்தும், சேதமாகியும் காணப்படுகின்றன.

ஆண்டிற்கு பல கோடி வருவாயை இந்து அறநிலையத்துறைக்கு ஈட்டி கொடுக்கும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பெயரளவிற்கு நடைபெறும் இந்த தரை ஓடுகள் பதிக்கும் பணியை பார்த்து பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். அத்துடன் இப்பணியை உடனடியாக உயர் அதிகாரிகள் நிறுத்திவிட்டு, முழுமையாக புதிதாக தரை ஓடுகளை அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுசீந்திரம் ஹிந்து சேவா சங்க நிர்வாகி ஏ.சிவா, குமரி மாவட்ட திருக்கோயல்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியனிடம் பிரகார மண்டபத்தில் பெயரளவிற்கு நடைபெறும் தரை ஓடு பதிக்கும் பணியை உடனே நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளார்.

அதில் “சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரகார மண்டபத்தின் மேலே தரை ஒடுகள் ஆங்காங்கே இரண்டு, மூன்று ஓடுகள் மாற்றப்படுகிறது. பிரகார மண்டபத்தின் மேல் தளத்தில் 1984 ஆகஸ்டு 29ம் தேதி நடந்த திருப்பணி நேரத்தில் தரை ஓடுகள் போடப்பட்டது. தரை ஓடுகள் அமைத்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது பெயரளவிற்கு மட்டுமே மாற்றும் பணிகள் நடக்கிறது.

இது தார் சாலை அல்ல. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கோவிலில் இதுபோன்ற தரமற்ற பணி ஏற்புடையதல்ல. பல ஆயிரம் கோடிகள் சொத்துடையதும், அரசுக்கு வருவாய் பெருமளவில் கொடுக்கும் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகும் தரை ஓடுகளை முழுமையாக மாற்றாமல் ஆங்காங்கே ஓட்டை உடைசல் வேலைகள் செய்வது மனவேதனை அளிக்கிறது.

எனவே தற்போது நடைபெறும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன் பிரகார மண்டபம் மற்றும் அனைத்து சன்னதிகளின் மேல் மண்டப தளத்திலும், பழைய தரை ஓடுகளை முழுவதுமாக அகற்றி செங்கல் பொடி போட்டு புதிய தரை ஓடுகளை பதிக்க வேண்டுகிறோம். பணி நடக்க வேண்டும் எனபதற்காக சமாளிக்கும் வகையில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்க மாட்டோம்.

மூலஸ்தானத்தின் மேலே டார்பாய் போட்டு மூடும் அளவிற்கு பணியின் தரம் உள்ளது. எனவே சுசீந்திரம் கோவிலின் புனிதமும் , பாதுகாப்பையும் காத்திட வலியுறுத்தி விரைவில் சுசீந்திரத்தில், குமரி மாவட்ட தேவசம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோயிலில் தரை ஓடு பதிக்கும் பணி தற்போதுதான் துவங்கியுள்ளது. பணிகள் முறைப்படி தரமாக நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றனர்.