60 பிரம்மாண்ட அண்டாக்கள்... மணக்க மணக்க பிரியாணி விநியோகம்!


மிலாடி நபியை முன்னிட்டு பிரியாணி விநியோகம்

கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3000 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு, வியாபார நோக்கம் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான இஸ்லாமியர்கள் காலையிலேயே இவற்றை வாங்கிச் சென்றனர்.

இறைதூதரான முகமது நபியின் பிறந்தநாள் மிலாடி நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக மிலாடி நபி விழாவான இன்று இஸ்லாமியர்களில் அனைத்து தரப்பினரும் சுவையான உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவாசல் நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் செய்வதற்காக பிரியாணி தயாரிக்கும் பணிகள் நேற்று இரவு முதலே நடைபெற்றது. பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில் 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3000 கிலோ அரிசி, 3000 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணியானது தயாரிக்கப்பட்டது. விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு இன்று காலை முதல் வியாபார நோக்கமின்றி ஒரு கிலோ மட்டன் பிரியாணி 1000 ரூபாய் என்ற விலையில் பிரியாணி விற்பனையானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

மிலாடி நபியை முன்னிட்டு பிரியாணி விநியோகம்

முகமது நபி பிறந்தநாளை முன்னிட்டு, லாப நோக்கமின்றி பிரியாணி தயாரிக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ மக்கள் என அனைத்து தரப்பினரும் குறைத்த விலையில் பிரியாணி வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 135 ஆண்டுகள் பழமையான கோட்டைமேடு பள்ளிவாசலில் 70 வருடங்களாக இந்த முறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். பிற்பகலில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கப்படுவதாகவும் தெரிவித்த பள்ளிவாசல் நிர்வாகிகள், கடைகளில் மட்டன் பிரியாணி ஒரு கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் 1000 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தனர்.

காலை 6 மணி முதல் பிரியாணி விற்பனை தொடங்கிய நிலையில் ஏராளமான பொதுமக்கள் மட்டன் பிரியாணியை வாங்கிச் சென்றனர். இதேபோல் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது. 12,000 பேருக்கு இலவசமாக குஸ்கா வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் மூன்று குஸ்காவினை வாங்கிச் சென்றனர். மிலாடி நபியை முன்னிட்டு இலவச குஸ்கா வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும், ஒன்பதாவது ஆண்டாக இலவசமாக குஸ்கா, அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

x