தோடர் இன மக்களின் ’மொற்பர்த்’ பண்டிகை; நீலகிரியில் பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டம்


தோடரின மக்களின் ‘மொற்பர்த்’ பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடரின பழங்குடிகளின் முக்கிய பண்டிகையான மொற்பர்த் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரியில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பணியர், தோடர், கோத்தர் என 6 பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமங்கள் மந்துகள் என்று அழைக்கப்படுகிறது. நீலகிரியில் மொத்தம் 65 மந்துகளில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட தோடர்கள் வசித்து வருகின்றனர்.

முத்தநாடு மந்தில் தோடரின மக்கள் வழிபாடு

இவர்களின் மொழி, உடை, பாவனைகள், பிற பழங்குடி இனங்களில் இருந்து மாறுபட்டு உள்ளது. இவர்களின் வாழ்வில் எருமை மாடுகள் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவற்றை பராமரிப்பது மற்றும் இவற்றின் பால் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமே இவர்களது வாழ்வாதாரம் இருந்து வருகிறது. இறை வழிபாடுகள் மற்றும் விழாக்களில் எருமை மாடுகளுக்கு முதலிடம் தரப்படுகிறது. அந்த வகையில் எருமை மாடுகள் விருத்தியடைய வேண்டும் எனவும் தங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் எனவும் வேண்டி மார்கழி மாதம் இவர்கள் மொற்பர்த் என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இளவட்டக்கல் தூக்கி இளைஞர்கள் உற்சாகம்

ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதி, அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள தோடரின மக்கள் அனைவரும் பங்கேற்று கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான பண்டிகை தோடர் மக்கள் வசித்து வரும் மந்துகளில் தலைமை மந்தான, தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தோடரின மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முத்தநாடு பகுதியில் உள்ள மூன்போ மற்றும் ஓடையாள்போ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் வளாகத்திற்குள் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள் பங்கேற்று தங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டுமென இறைவனிடம் வழிபட்டனர். தொடர்ந்து பழங்கால முறைப்படி இளைஞர்கள் பலர் தங்கள் தோள்களில் இளவட்டக்கல் தூக்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

x