சரண கோஷத்துடன் சபரிமலைக்குப் புறப்பட்டது தங்க அங்கி... வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு!


தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கவுள்ள 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து இன்று புறப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஊர்வலம் இன்று (டிச.23) ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரைத் திருநாள் மகாராஜா கடந்த 1973-ம் ஆண்டு இந்த தங்க அங்கியை ஐயப்பனுக்கு வழங்கினார். அது ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து இன்று அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்து வழிபடுகின்றனர்.

சபரிமலை

இந்த தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 26 பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை வந்தடைய உள்ளது. பின்னர் அங்கிருந்து தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளனர். இதனைத்தொடர்ந்து மறுநாள் (டிச.27) மதியம் 12.30 மணிக்கு மேல்மண்டல பூஜை நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சொர்க்கவாசல் திறப்பில் அதிர்ச்சி... தலைகீழாக கவிழ்ந்த பெருமாள்!

x