மின்னொளியில் ஜொலிக்கும் ராமர் கோயில்... விழாக்கோலம் பூண்டது அயோத்தி!


மின்விளக்குகளால் ஜொலிக்கும் ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நெருங்கும் நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் மின்னொளியால் ராமர் கோயில் ஜொலிக்கிறது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆன்மிக தலைவர் தலாய் லாமா, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி உள்பட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோயில் திறப்பு விழாவிற்காக மிக பிரம்மாண்டமான அளவில் மற்ற ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஜனவரி 22 ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட திறப்பு விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் ஓவியம் மற்றும் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகு மிளிர காணப்படுகின்றன.

ரம்பாத், பக்தி பாதை மற்றும் சுக்ரீவா கோட்டையில் அலங்காரம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சுவர்கள் டெரகோட்டா மற்றும் நுண்ணிய களிமண் சுவரோவிய கலைப்பொருளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் அவை ஒளி வீசுகின்றன. அது காண்போரை கவர்ந்திழுத்து பரவசத்திற்கும் உள்ளாக்குகிறது. ஒட்டுமொத்த அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தர்ம பாதையின் ஓரங்களில் உள்ள சுவர்களில் ராமாயண சம்பவங்களை சித்தரிக்கும் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன. சுவர்களில் திரேதாயுகத்தை நினைவுபடுத்தும் கலைப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகின்றன. சாலையின் இருபுறமும் உள்ள நிறுவனங்கள், கட்டிடங்கள், கடைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. சுமார் ரூ.1800 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கோயிலில் 12 மணி நேரத்தில் 70 முதல் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!

அதிர்ச்சி... 8வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிப்ட்; உயிருக்கு போராடும் 5 ஊழியர்கள்

x