பத்மாவதியுடன் திருவேங்கடவன் தங்கியிருந்த ஸ்ரீநிவாசமங்காபுரம்


ஸ்ரீநிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார்

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு நிகராக, பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தும் கோயிலாக ஸ்ரீநிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் விளங்குகிறது.

திருச்சானூர் (ஸ்ரீநிவாசமங்காபுரம்) பத்மாவதி தாயார் கோயில்

திருவேங்கடவனுக்கும், பத்மாவதி தாயாருக்கும் நாராயணவனத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அங்கு அகத்திய முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்துக்கு தம்பதியர் இருவரும் சென்றனர். ஆறு மாதங்களுக்கு புதுமணத் தம்பதியர் மலை மீது ஏறக்கூடாது என்று அகத்திய முனிவர் கூறினார். அதன்படி, புதுமணத் தம்பதியர் ஆறு மாதங்கள் அகத்தியரின் ஆஸ்ரமத்தியிலேயே தங்கியிருந்தனர். இத்தலமே ஸ்ரீநிவாசமங்காபுரம் எனப்படுகிறது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். அகத்தியரின் ஆஸ்ரமம்தான் இப்போது கோயிலாக மாறியிருக்கிறது.

ஸ்ரீநிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார்

மீண்டும் திருமலைக்கு வேங்கடேச பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பாக இரு வரங்களைக் கொடுத்தார்.

1. மலை ஏறி தன்னை தரிசிக்க முடியாத முதியவர்களும், புதிதாக திருமணமான தம்பதியரும் ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தரிசித்தாலேயே, திருமலையில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

2. திருமணம் வேண்டுவோரும், தங்கள் துணையைப் பிரிந்து வாடுவோரும் ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தரிசித்தால் அவர்களின் விருப்பம் நிறைவேறும்.

பெருமாள் அளித்த இவை இரு வரங்களின்படி, இன்றைக்கும் ஏராளமானோர் இத்தலத்துக்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கின்றனர்.

திருமண வரன் வேண்டும் ஆண்களும், பெண்களும் இக்கோயிலில் தரிசனத்துக்கு குவிகின்றனர்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்று நடத்துகிறது.

திருச்சானூர் (ஸ்ரீநிவாசமங்காபுரம்) பத்மாவதி தாயார் கோயில்

திருச்சானூர்

திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது திருச்சானூர். இங்குதான் தாயார் பத்மாவதியின் கோயில் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பத்மாவதி தாயார் வீற்றிருக்கிறார். பிரம்மாண்டமான ராஜகோபுரம், தங்கத்தாலான விமானம் ஆகியவை உள்ளன. ஆண்டாள் நாச்சியாருக்கும் சன்னதி உள்ளது.

தெப்பக்குளம் - கார்த்திகை பஞ்சமி தீர்த்தவாரி உற்சவம்

பத்மசரோவரம் எனப்படும் மிகப்பெரிய தெப்பக்குளம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஆகாசராஜன் வேள்விக்கான இடத்தை சமன்செய்தபோது, மண்ணுக்குள் இருந்து பெட்டி ஒன்று கிடைத்தது. அதனுள் தாமரை மலரில் இருந்த பெண் குழந்தையை, ஆகாசராஜன் எடுத்து வளர்த்தார். அவள்தான் மகாலட்சுமியின் அம்சமான பத்மாவதி தாயார். குறிப்பிட்ட அந்த இடம்தான் இந்த தெப்பக்குளம். தாயார் கண்டெடுக்கப்பட்ட நாளான கார்த்திகை பஞ்சமி அன்று, பல லட்சம் பேர் திரளும் தீர்த்தவாரி உற்சவம் இந்த தெப்பக்குளத்தில்தான் நடைபெறுகிறது.

திருமலையில் வீற்றிருக்கும் திருவேங்கடவன் தினமும் இரவில் திருச்சானூருக்கு வந்துவிட்டு, அதிகாலையில் மீண்டும் திருமலைக்கு சென்று விடுவதாக ஐதீகம்.

திருச்சானூர் (ஸ்ரீநிவாசமங்காபுரம்) பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்

திருச்சானூர் (ஸ்ரீநிவாசமங்காபுரம்) பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோத்சவம்

x