திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தமிழக பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் ஐந்தாவது படை வீடான திருத்தணியில் இன்று கிருத்திகை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண சிறப்பு தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சிறப்பு தரிசன வழியில் தமிழக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி ஆகியோர் அபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில அமைச்சர்களை திருத்தணி நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். ஆந்திர மாநில அமைச்சர்களுடன் இருபதுக்கும் மேற்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உடன் வந்திருந்தனர். இவர்கள் அனைவரையும் சிறப்பு வழியில் அழைத்துச் சென்று கோயில் நிர்வாகம் சார்பில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழி தரிசனம் இல்லை என கூறிய திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம், ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்குவது சரியா என முருக பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!
தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!