காக்கும் கார்த்திகைச் செல்வன் – 43


குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

ராமநாதபுரம் மாவட்டம், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், முருகப்பெருமானின் கோயில்களில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் 11 தலைகள், 22 கரங்களுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் எப்போதும் வந்திருந்து வழிபாடு செய்கின்றனர். இத்தலத்தில் முருகப் பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளுக்கு விளக்கம் அளிக்க, அதை சிவபெருமான் நின்று கேட்கும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு

ராமநாதபுரத்தில் வாழ்ந்த ஜமீன்தார் பாஸ்கர சேதுபதி ஆன்மிகம், தமிழ்ப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் தானத்திலும் சிறந்து விளங்கினார். பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்த பாஸ்கர சேதுபதி தினமும் குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் பாஸ்கர சேதுபதி சுவாமிமலை சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு ராமநாதபுரம் திரும்பினார். அன்றிரவு அவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, “நீ தினமும் செல்லும் குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் விக்கிரகத்தை எடுத்துவிட்டு, புதிதாக ஒரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு. அப்படிச் செய்தால் உனக்கும், உனது மக்களுக்கும் பல நன்மைகள் ஏற்படும். எனது பழைய உருவம் போன்றே புதிய விக்கிரகத்தை அமைக்கவும்” என்று கூறி மறைந்ததாகச் சொல்லப்படுகிறது.

பழைய உருவம் என்று முருகப்பெருமான் கூறியது குறித்து, பாஸ்கர சேதுபதி பல ஆன்மிகச் சான்றோரிடம் ஆலோசனை செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரிலும், முருகப் பெருமானின் அருள்வாக்கின்படியும் பாஸ்கர சேதுபதி, பழைய விக்கிரகத்தை அகற்றிவிட்டு, புதிதாக முருகனின் விக்கிரகத்தை 11 முகங்களுடனும் 22 கரங்களுடனும் பிரதிஷ்டை செய்து, நித்திய பூஜைகள், அபிஷேகங்களுக்கு ஏற்பாடு செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான ‘சுவாமிநாத சுவாமி’ என்ற பெயரே குண்டுக்கரை முருகப்பெருமானுக்கும் சூட்டப்பட்டது.

கோயிலின் அமைப்பும் சிறப்பும்

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்னரே முருகப்பெருமான் இத்தலத்துக்கு வந்து சென்றதாக அறியப்படுகிறது. அப்போதே அவர் 11 முகங்களுடனும், 22 கரங்களுடனும் அவ்வூர் மக்களுக்கு காட்சி அருளியதாகத் தெரிகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஸ்வரூபம் எடுத்த நிலையிலேயே முருகப் பெருமான் இத்தலத்தில் கோயில் கொண்டார். முருகப்பெருமானுக்கு உரிய 6 முகங்கள், சிவபெருமானுக்கு உரிய 5 முகங்கள் ஆகியவற்றை இணைத்து 11 முகங்களுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இதன் மூலம் முருகன், சிவ அம்சமாக உள்ளதை அறியலாம். அதாவது முருகனே சிவன், சிவனே முருகன் - இருவரும் ஒருவரே. வேறு வேறு அல்லர்.

பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கு முருகப்பெருமான் உபதேசிக்கத் தொடங்கும்போது, சிவபெருமான் அவரைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொள்வார். இந்தக் காட்சியையே அனைத்துக் கோயில்களிலும் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் நாம் காண்கிறோம். ஆனால், இத்தலத்தில் முருகப்பெருமான் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூற, சிவபெருமான் அதை நின்றபடி கேட்கிறார். இக்காட்சி வேறு எங்கும் காணக் கிடைக்காத சிறப்பு அம்சமாகும்.

கோயிலின் ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், நுழைவுப் பகுதியில் நந்திதேவருக்கு அருகில் வேல், மயில், பாம்புடன் கூடிய கொடிமரம் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஸ்ரீஜெய துர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், விநாயகர், பால முருகன், நவக்கிரகங்கள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், வீரபாகு உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குள் 18 கரங்களுடன் கூடிய 7 அடி உயர துர்கை அம்மன் அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமானின் 3 சக்திகள்

முருகப்பெருமானுக்கு இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி என்று 3 சக்திகள் உள்ளன. இச்சா சக்தி உருவமாக இருக்கும் வள்ளியை வழிபட்டால் இனிய வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். அமுதசுரப்பி, ஏயினர் குலோத்துமை, பெண்கள் நாயகம் என்று இலக்கியங்கள் வள்ளியைப் போற்றுகின்றன. முருகப்பெருமானின் வலது புறத்தில் இருக்கும் வள்ளி தன் வலது கையில் தாமரை மலரை ஏந்தியிருப்பாள். இந்த மலர், முருகனின் கண்ணில் இருந்து வரும் சூரிய காந்தத்தால் எப்போதும் மலர்ந்திருக்கும்.

முருகப்பெருமானின் கிரியா சக்தியாக இருப்பவள் தெய்வயானை. பொன் உலகுக்கு உரியவளான இவளை வழிபட்டால் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். அமுதமாது, தேவகுஞ்சரி, வேழமங்கை என்று பல பெயர்களால் இவள் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறாள். முருகனின் இடது புறத்தில் இருக்கும் இவள், தன் கையில் கருங்குவளை மலரை ஏந்தியிருப்பாள். இந்த மலர் முருகப் பெருமானின் இடது கண்ணில் இருந்து வரும் சந்திர ஒளி பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும்.

கந்தனின் கையில் உள்ள வேல் ஞானசக்தியின் அடையாளமாக போற்றப்படுகிறது. கோடிக்கணக்கான சூரியன் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு இணையாக இந்த வேலின் பிரகாசம் இருக்கும் என்று புராணங்கள் உரைக்கின்றன. வேலை வணங்குபவர்களுக்கு வாழ்வின் யதார்த்தம் குறித்த ஞானம் கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்தும் மாயை என்பதும், இறை இன்பமே நிரந்தர இன்பம் என்பதும் உணரப்படும்.

திருவிழாக்கள்

இங்கு வைகாசி விசாகத்தின் போது பிரம்மோற்சவமும், சூரசம்ஹார விழா (7 நாள்), கார்த்திகைத் திருவிழா, தைப்பூச விழா, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார விழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறும். ஐப்பசி கந்த சஷ்டி திருவிழாவின்போது முருகன், சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அன்று மட்டும் 11 தலைகளுடன் காட்சி அருளும் கந்தனைக் காண திரளான பக்தர்கள் குண்டுக்கரைக்கு வருவர்.

சித்திரை பௌர்ணமி, தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, மார்கழி நோன்பு, ஆங்கில புத்தாண்டு, சிவராத்திரி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை, சஷ்டி தினங்களில் இங்கே முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

சித்திரை வருடப் பிறப்பு தினத்தில் துர்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தைப்பொங்கல் தினத்தில் காய்கறி மற்றும் பழங்களால் ஆன சாகம்பரி அலங்காரத்தில் அம்பிகை காட்சி அருள்வதைக் காண எண்ணற்ற பக்தர்கள் குவிவது வழக்கம்.

திருவிழாக் காலங்களில் காலை, மாலை வேளைகளில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்பார். சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள், கந்த புராணம், கந்தனின் மூன்று சக்திகள் தொடர்பான உபன்யாச நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கும்.

இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து, சிறப்பு வழிபாடுகள் செய்து தீர்த்தம் வழங்கினால் நிவாரணம் கிடைக்கும் என்று அறியப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் மீண்டும் இங்கு வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், புதிய வஸ்திரம் அணிவித்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி இறக்குதல் உள்ளிட்டவற்றையும் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

தினமும் காலை 6 முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையும் இக்கோயில் நடை திறந்திருக்கும். பிரதோஷ நாட்களில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முகக் கவசம் உள்ளிட்ட பக்தி பாடல்களைப் பாடுவர்.

x