விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண் பக்தர்களை கிண்டல் செய்து துன்புறுத்திய 55 பேரை தெலங்கானா காவல் துறையின் ஷீ டீம் (பெண்கள் குழு) கைது செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கைதர்பாத் படா கணேஷ் என்ற இடத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களைக் கிண்டல் செய்து துன்புறுத்துபவர்களைக் கண்காணிக்க காவல் துறை சார்பில் ஷீ டீம்கள் (பெண்கள் குழு) அமைக்கப்பட்டன.
இதையடுத்து விநாயகர் சதுர்த்தி பந்தல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிக்கும் வகையில் ஷீ டீம்கள் அமைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி கூட்டத்தைப் பயன்படுத்தி ஆபாச செயல்களில் ஈடுபட்டது, தகாத முறையில் தொடுவது அல்லது பெண்களைப் பின் தொடர்ந்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு கையும், களவுமாக ஈடுபட்ட 55 பேரை கடந்த மூன்று நாட்களில் இந்த டீம் கைது செய்துள்ளது.
இதில் பெரும்பாலான குற்றவாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை நடந்து வருவதாக ஷீ டீம் டிசிபி தெரிவித்தார்.