அதிகாரியை கண்டித்து பழநி கோயில் முடி எடுப்பவர்கள் வேலை நிறுத்தம்!


பழநி கோயிலில் முடி காணிக்கை

பழநி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்களை உதவி ஆணையர் லட்சுமி அவமரியாதையாக பேசியதாக கூறி அவரை கண்டிக்கும் விதமாக இரண்டாவது நாளாக கண்டன பேட்ச் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முடி எடுக்கும் ஊழியர்கள் போராட்டம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம் , மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை செலுத்த இடங்கள் உள்ளன.

இங்கு 330 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால் இவர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது. இவர்களுக்கு தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணியாளருக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் காணிக்கை செலுத்தும் இலவச டிக்கெட்டுகளில் 30 ரூபாய் பங்கு வீதம் மாதம் தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து இவர்களுக்கு பங்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்களிடம் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் லட்சுமி இருவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த 15 நாட்கள் பின்பு இரு தொழிலாளர்கள் உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பணியில் சேர்வதற்கு கோரியுள்ளனர்.

அப்போது தங்களது மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து கோயில் பணியாளர் இருவர் தமிழ்செல்வன் மற்றும் குமரேசன் உதவி ஆணையரை சந்திக்க அவருடைய மனைவி அழைத்துச் சென்றபோது, அவர்களிடம் உதவி ஆணையர் லட்சுமி தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் கண்ணீருடன் ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர்.

இதையடுத்து முடி எடுக்கும் தொழிலாளர்கள் நேற்று உதவி ஆணையர் லட்சுமியை கண்டிக்கும் விதமாக கண்டன பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர். இதனால் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

x