திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து... கோடைக்கால கூட்டநெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்!


திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை காலத்தில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் விஐபி பிரேக் தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதாரணமான நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாட்கள் என்றால் அது மேலும் அதிகரிக்கும். அதிலும் கோடையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக திருப்பதியில் தரிசனம் செய்வார்கள். அதனால் கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருக்கும்.

இதனால் நாள் கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் தற்போதே பக்தர்களின் வருகையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. திருப்பதியில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தில் மாதாந்திர 'டயல் யுவர் இ.ஓ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலும் இருந்து 29 அழைப்பாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியுடன் உரையாடினர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தருமா ரெட்டி, கோடை கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, தற்போது விஐபி பிரேக் சிஸ்டத்தை நீக்கிவிட்டு, திருப்பதியில் இலவச தரிசனம் டோக்கன்களை 30,000 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். கோடை விடுமுறையின்போது, ​​பொதுவான பக்தர்களுக்கு அதிக தரிசன நேரங்களை வழங்குவதே தங்களின் முன்னுரிமை என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

​​பக்தர்களுக்கு லட்டுகள் வழங்க தற்போது 60 கவுண்டர்கள் இயங்கி வருவதாகவும், கோடை விடுமுறையில் மேலும் 15 கவுண்டர்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்றும், லட்டு வளாகத்தில் உள்ள வரிசையில் காத்திருக்கும் நேரம் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்.

x