புரட்டாசி 2-வது சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


தூத்துக்குடி: புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாமரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்கள் சிறப்பு மற்றும் வைணவ ஸ்தலங்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமான நாளாகும். புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான இன்று வைணவ ஸ்தலங்களாக விளங்கும் பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் நவதிருப்பதி ஸ்தலங்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில், நத்தம் விஜயாசான பெருமாள், திருப்புளியங்குடி காய்ச்சினிவேந்த பெருமாள், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ஆகிய கோயில்களில் நேற்று 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இந்து அறநிலையத்துறை சார்பில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர் இலவசமாக நவதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது பள்ளிகளில் முதல் பருவத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நவதிருப்பதி ஸ்தலங்களிலும் அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

x