ஜனவரி மாதம் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்து தமிழ்நாட்டில் ஒரு கோடி குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020- ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார். தற்பொழுது இந்த கோயிலின் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், 2024 ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களை ஜனவரி 1 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் வழங்க உள்ளதாகவும், இதற்கான பணிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மண் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பு போய்ச்சேர வேண்டும் என்பது ஆர்எஸ் எஸ் மேலிடத்தில் இருந்து வந்துள்ள உத்தரவு என்கிறார்கள். இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து திமுக பேசி வரும் நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பு மூலம் இந்துக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதவிர, நாடு முழுவதும் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள், பிரமுகர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கும் பொறுப்பை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.
மேலும், ராமர் கோயில் டிரஸ்ட்டின் சார்பில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்களுக்கும் கும்பாபிஷேக அழைப்புகளை அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கிய விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுபெற்றவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களையும் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்க ஆயத்தமாகி வருகிறது ஆர்எஸ்எஸ் அமைப்பு.