சிவனருள் பெற்ற அடியார்கள் – 4


சிவனருளால் உயிர்கள், பல பிறவி எடுத்து பக்குவம் அடைந்து, மெய்ஞானத்தை உணர்ந்து வீடுபேற்றை அடைகின்றன. இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, பக்தியுடன் அவனை வணங்கி, முக்தி பெற வேண்டும். அவ்வாறு இறைவனை வழிபட்டு, அவனது திருவருள் பெற்ற சிவனடியார்களின் (திருத்தொண்டர்கள்) வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதே சேக்கிழார் அருளிய ‘திருத்தொண்டர் புராணம்’ ஆகும்.

திருத்தொண்டத் தொகை என்ற நூலை எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் நண்பராகவே அறியப்படுகிறார். ஒருசமயம் திருவாரூர் கோயிலில் ஈசனுடன் சுந்தரமூர்த்தி நாயனார் உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் பலரைப் பார்த்ததும், அவர்கள் குறித்து ஈசனிடம் வினவுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார். சிவபெருமானும் அவர்களது பெருமையை சுந்தரரிடம் எடுத்துரைக்கிறார். மேலும், அவர்கள் குறித்து பாடுமாறு சுந்தரரைப் பணித்து, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் சிவபெருமான்.

சேக்கிழார்

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை நூல், பதினொரு பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் 58 ஆண் அடியார்கள், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி ஆகிய 2 பெண் அடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை மூலமாகக் கொண்டு, பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், செவிவழி செய்திகள் ஆகியவற்றை இணைத்து, சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தை இயற்றினார். சுந்தரமூர்த்தி நாயனார், அவரது தந்தை சடையனார், தாய் இசைஞானியார் ஆகியோரையும் சேர்த்து 63 சிவனடியார்கள் (நாயன்மார்கள்) குறித்து சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் கூறியுள்ளார்.

சிவகதை என்பது இப்பிறவியில் சிவபெருமானிடத்தில் பேரன்பை விளைத்து, மறுமையில் அதன்பயனாக வீட்டின்பத்தை அளிப்பதாக போற்றப்படுகிறது. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதியான பொருளாகவே சிவகதை கொண்டாடப்படுகிறது.

ஒருசமயம் அநபாய மன்னன் சேக்கிழாரை நோக்கி, “சிவகதை என்றால் என்ன?” என்று வினவ, அது திருத்தொண்டர் வரலாறென்பது விடையாயிற்று. சேக்கிழார் பெருமான், தில்லை நடராஜர் கோயிலுக்குச் சென்று, இறைவனிடம் சிவகதை குறித்து பாட தனக்கு அருள்புரிய வேண்டுகிறார். இறைவனும் அவருக்கு வானிழல் மொழியாக ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கிறார்.

ஈசன் அருள்புரிந்து 63 நாயன்மார்களுக்கும் தெய்வீகக் காட்சி அருள்கிறார். கோயில் தொண்டு புரிந்து, பாடிப் பதம் பெற்று, மனக் கோயில் கட்டி, மந்திரம் ஜெபித்து, அடியார்க்குத் தொண்டு புரிந்து, சமணரோடு போரிட்டு, திருக்கோயில் கட்டி, பல தலங்களை தரிசித்து பாடி, சிவ வேடத்துக்கு மதிப்பு ஈந்து இறந்து, செயற்கரிய செயல் புரிந்து, சிவபெருமானால் சோதிக்கப் பெற்று, அழுத்தமான சைவப் பற்று கொண்டு என்று இறையருள் பெற்று அவன் தாழ் பணிந்தவர்களே அவ்வடியார்கள் ஆவர்.

இப்படி பலவகைத் தொண்டர்களில், அரச மரபினர் 12 பேர். அந்தணர் 12 பேர். வணிகர் 6 பேர், வேளாளர் 13 பேர். மரபுக்கு ஒருவர் என்று 10 பேர். மரபு கூறப்படாதவர் 6 பேர். ஆதிசைவர்கள் 4 பேர்.

இவர்களில் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர். சோழ நாட்டடியார்கள் 37 பேர். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் 5 பேர். மலைநாட்டு அடியார்கள் 2 பேர். நடுநாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர். தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் 8 பேர். வடநாட்டு அடியார்கள் 2 பேர்.

குருவருளால் முத்தி பெற்றவர் 11 பேர், சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் 31 பேர், அடியார் வழிபாட்டால் முத்தி பெற்றவர் 21 பேர் என்று திருத்தொண்டர்கள் வகைபடுத்தப்படுகின்றனர். இவர்களுள் 4 பேர் இயலிலும் இசையிலும் வல்லவர்கள். 4 பேர் இசைத்தமிழில் வல்லவர்கள். 4 பேர் இயற்றமிழில் வல்லவர்கள் ஆவர்.

அறியாமையை வேரறுத்து, ஒன்றிலும் விருப்போ வெறுப்போ கொள்ளாது, அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது மெய்ப்பொருளே என்று மனதை இறைவனிடம் குவியச் செய்ய வேண்டும். அவ்வாறு அன்பு கொண்டு முழு ஈடுபாட்டுடன் இறைவனை இடைவிடாது நினைத்தல் வேண்டும்.

அனைத்து ஆற்றலையும் உடைய இறைவன் உண்மை அன்பால் வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்து, அவர்கள் விரும்பும் வடிவில் காட்சியளித்து, அவர்களை உலகில் புகழுடன் வாழச் செய்து, நிறைவில் வீடுபேறும் அருள்வார்.

இவ்வாறு அன்புநெறியைப் பின்பற்றி பிறவிப் பிணி அறுத்தவர், இவ்வுலகில் எண்ணற்றோர். அவ்வாறு இறைவனை தங்கள் அன்பால் உணர்ந்தவர்கள் இந்த 63 சிவனடியார்கள் ஆவர். ஒவ்வொருவரும் சைவநெறி தழைக்குமாறு செய்து ஈசன் திருவடி அடைந்தனர். அடியார்கள் செய்த வழிபாட்டு முறைகள் பலவிதம்.

இவர்களில் ஆலயத் தொண்டு புரிந்தவர்கள் 7 பேர் (மூர்த்தி நாயனார், நமிநந்தி அடிகள், கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், முருக நாயனார், திருநாளைப் போவார், செருத்துணை நாயனார்) ஆவர். பாடிப் பதம் பெற்றவர்கள் 2 பேர் (திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாய நாயனார்). மனக்கோயில் கட்டியவர்கள் 2 பேர் (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார்). மந்திரம் ஜெபித்த அடியார்கள் 4 பேர் (உருத்திர பசுபதியார், சிறப்புலி நாயனார், சோமாசி மாறர், திருமூலர்).

அடியார் தொண்டு புரிந்தவர்கள் 9 பேர் (அப்பூதியடிகள், கணநாதர், புகழ்த்துணையார், இடங்கழியார், நேச நாயனார், நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், சடையனார், இசைஞானியார்). சமணரோடு போரிட்டு சைவ நெறி பரப்பியவர்கள் 5 பேர் (தண்டியடிகள், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார்). கோயில் எழுப்பிய அடியார்கள் 2 பேர் (கோச்செங்கட் சோழர், காரியார்).

தலங்களை தரிசித்து பாடியவர்கள் 6 பேர் (காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்கர், சுந்தரமூர்த்தியார், சேரமான் பெருமாள், விறல்மிண்டர்). சிவவேடத்துக்கும் மதிப்பீந்தவர்கள் (மெய்ப்பொருள் நாயனார், ஏனாதி நாயனார்). செயற்கரிய செயல் புரிந்தவர்கள் 10 பேர் (கண்ணப்பர், புகழ்ச்சோழர், சிறுத்தொண்டர், குங்குலியக் கலயர், திருநீலநக்கர், கலியர், சண்டேசர், அடிவாட்டாயர், கலிக்கம்பர், கோட்புலியார்).

சிவபிரானால் சோதிக்கப்பட்டவர்கள் 8 பேர் (இயற்பகையார், திருநீலகண்டர், இளையான்குடி மாறர், அமர்நீதியார், திருக்குறிப்புத் தொண்டர், அதிபத்தர், மானக் கஞ்டாறர், ஏயர்கோன் கலிக்காமர்). அழுத்தமான சைவ பற்று உடையவர் 6 பேர் (எறிபத்தர், சத்தியார், மூர்க்க நாயனார், சாக்கியர், முனையடுவார், நெடுமாறர்).

பிற அடியார்களாக தில்லைவாழ் அந்தணர்கள், பொய்யடிமையில்லாத புலவர், பத்தராய் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள், திருவாரூர் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவோர், முழுத் திருநீறு பூசுவோர், அப்பாலும் அடிசார்ந்தார் ஆகியோரும் திருத்தொண்டர் புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் வழிபாட்டு முறையைப் பற்றியும் அறிந்து கொள்வோம்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 3

x