பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று, முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இன்று மாலை 4 மணிக்கு அருள்மிகு முத்துக்குமாராசாமி, வள்ளி, தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் இருந்து, நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் விண்ணதிர அரோகரா முழக்கங்களை எழுப்பினர்.

தேரோட்டத்தில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 27-ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. தேரோட்டத்தை ஒட்டி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.