இந்த ஆண்டு சபரிமலையில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு திருப்பதி மாடலில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அது முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தின் பாதிக்கும் மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜை காலத்தின் துவக்கத்திலேயே அதிகரித்துள்ளது.
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களை 18ம் படியேற்றவும், தரிசனத்திற்கு அனுமதிப்பதிலும் போலீசார் அதிக சிரமப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தற்போது "திருப்பதி" மாடல் வரிசையை தேவஸ்வம் போர்டு அமல்படுத்தியுள்ளது. அதன்படி பக்தர்கள் மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை உள்ள பகுதிகளில் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு, மண்டப நடைப்பந்தலில் இருந்து படிப்படியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை துவங்கி பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது சபரிமலை. “திருப்பதி" மாடலான இந்த வரிசைத் திட்டம் மூலம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த வரிசை முறை வெற்றிபெற்றதாக கூறும் தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்களின் வருகை அதிகரிக்கும் சமயங்கள் மற்றும் விழாக்காலங்களில் இந்த முறையை பின்பற்றப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!