பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பா? - உடனடியாக விளக்கமளித்த தமிழக அரசு!


சென்னை: பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என பரப்பப்படும் செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்று சமூக வலைதளத்தில் சிலர் குற்றம் சாட்டினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், ‘பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பகிரப்படும் செய்திகள் வதந்தி. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x