மகா சிவராத்திரி... பிரதோஷம்... மாசி அமாவாசை... ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!


இன்று மகா சிவாரத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. பார்வதி தேவி மனம் வருந்தி சிவபெருமானை வணங்கி பூஜித்ததால் இருண்ட உலகை சிவபெருமான் மீண்டும் சிருஷ்டித்த தினத்தையே மகா சிவராத்தியாக கொண்டாடுகிறோம். ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் சிவராத்திரியன்று இரவு நமது முதுகுத்தண்டு வடாம் நிமிர்ந்த நிலையில், நேராக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இன்றைய சிவராத்திரி நாளில் இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு செய்தால் குடும்பம் செழித்தோங்கும். கோயில், தீர்த்தம், ஸ்தலம் என முப்பெருமைகளுடன் காசிக்கு அடுத்த புண்ணியதலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் விளங்குகிறது.

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலில் ஓம் நமசிவாய முழக்கம், ஸ்படிக லிங்க பூஜையுடன் சிவராத்திரி வழிபாடு துவங்கியது. நாளை மார்ச் 9ம் தேதி காலை வரை சுவாமிக்கு விடிய விடிய நடைபெறும் சிவராத்திரி பூஜையில் பக்தர்கள் விழித்திருந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். நாளை மார்ச் 9ம் தேதி தேரோட்டமும், மார்ச் 10ம் தேதி அமாவாசை நாளில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

x