சிவனருள் பெற்ற அடியார்கள் – 17


வடநாட்டில் பிறந்த திருமூல நாயனார், சிவயோகத்தில் வல்லவரான நந்திதேவரின் அருள் பெற்றவர். சிவன் கோயில்கள் பல சென்று தரிசனம் செய்த சிவயோகியான இவர், அணிமா முதலான 8 சித்திகளையும் பெற்றிருந்தார். திருமந்திரம் பாடி சிவயோக நுணுக்கங்களை விளக்கமாக உரைத்துள்ளார்.

திருமூலர்

சிவபெருமான் உறையும் கைலாய மலையில் முதற் பெருங்காவலராக விளங்குபவர் நந்தியம்பெருமான். அவரது அருள்பெற்ற சிவயோகிகள் பலர் இருந்தனர். அவர்களுள் ஒருவராக இருந்த ‘சுந்தரநாதர்’ என்ற சிவயோகி, சிவாகமங்களில் வல்லவராகத் திகழ்ந்தார். சுந்தரநாதருக்கு, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்திய முனிவரை தரிசித்து, அவருடன் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

தனது விருப்பத்தை சிவபெருமானிடம் தெரிவித்து, ஒருநாள் பொதிகை மலைக்குப் புறப்பட்டார். திருக்கேதாரம், நேபாளம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பிறகு திருவாடுதுறை என்ற சிவத்தலத்தை அடைந்தார்.

திருமூலர்

திருவாடுதுறை, உமாதேவி பசுவின் கன்றாக வடிவம் கொண்டு தவம் செய்த திருத்தலம் (அதுல்யகுஜாம்பிகை உடனுறை மாசிலாமணீஸ்வரர் கோயில்) ஆகும். இத்தலத்தில் சிவபெருமான், கோமுக்தீஸ்வரர் (அணைந்திருந்த நாயகர் – மாசிலாமணீஸ்வரர்) என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காவிரி ஆறு ஓடுவதால் இத்தலம் மிகச் செழிப்புடன் காணப்படுகிறது.

திருவாடுதுறை வந்தடைந்த சுந்தரநாதர், பசுபதிநாதரை வணங்கி மகிழ்ந்தார். சிலகாலம் இத்தலத்திலேயே தங்கியிருந்து பரமனை வழிபட்டு வந்தார். அருகில் உள்ள பிற தலங்களையும் தரிசிக்க எண்ணம் கொண்டார். அப்படி அவர் காவிரிக் கரை வழியாக சென்று கொண்டிருந்தபோது, பசுக்கள் கூட்டத்தைக் காண்கிறார். அக்கூட்டத்தை மூலன் என்ற இடையர் மேய்த்துக் கொண்டிருப்பதையும் காண்கிறார்.

சாத்தனூரைச் சேர்ந்த மூலன், அந்தணர்கள் வீட்டு ஆனிரைகளை மேய்த்து வரும் தொழிலை மேற்கொண்டு வந்தார். மிகவும் கருணை உள்ளம் கொண்ட மூலன், பசுக்களை அடிக்காமல், துன்புறுத்தாமல், வெயிலில் மேயவிடாமல், நிழல் உள்ள இடத்திலேயே மேயவிட்டு, மிகவும் பாதுகாப்பாக, பேணி வளர்த்து வந்தார். அதில் நல்ல ஊதியம் கிடைத்து, மனைவி, மக்களோடு மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

அன்றைய தினம் சுந்தரநாதர், மூலன் ஆனிரைகள் மேய்த்துக் கொண்டிருக்கும் அழகைக் கண்டு வியந்தார். அப்போது எதிர்பாராமல் மூலனின் ஆயுள் முடிவுறுகிறது. இறந்த மூலனைச் சுற்றி பசுக்கள் கூடின. கண்ணீர் சிந்தியபடி, மூலனை நாக்கால் நக்கியும், உடலால் உராய்ந்தும் ஆனிரைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தின. பசுக்களின் நிலைகண்டு வருந்திய சிவயோகியார், அவற்றின் துன்பத்தைப் போக்க திருவுள்ளம் கொண்டார்.

கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றிருந்த சுந்தரநாதர், மூலன் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். மூலன் உறங்குபவர் போல், கண்விழித்து திருமூலராக எழுந்தார்.

திருமூலர்

ஆனிரைகள் மகிழ்ச்சி அடைந்து, துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களைத் தட்டிக் கொடுத்து, பசுக்களை அழைத்துக் கொண்டு மூலனின் ஊருக்குச் சென்றார். ஒவ்வொரு பசுவாக, அவற்றின் இல்லம் செல்ல, திருமூலர் மட்டும் அவரது இல்லத்துச் செல்லாமல், வழியில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். தன் ஞானதிருஷ்டியால் மூலன் திருமணமானவர் என்பதை அறிந்து கொண்டார். இன்னும் கணவன் வீடு திரும்பவில்லையே என்று வருத்தம் கொண்ட மூலனின் மனைவி அவரை ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்தாள்.

வழியில் ஓரிடத்தில் கணவன் அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தாள். மூலனின் மனைவி கேள்விகள் கேட்கும்போது, எதற்கும் திருமூலர் பதில் அளிக்கவில்லை. என்னவாயிற்று என்று அவள் நெருங்கி வரும்போது, திருமூலர் சற்று விலகிக் கொண்டார். திருமூலர் மூலனின் மனைவியைப் பார்த்து, “உனக்கும் எனக்கும் எவ்வித பந்தமும் கிடையாது. இனி கோயில் சென்று சிவபெருமானை வழிபட்டு அமைதி பெறுவாயாக” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். ஒரு திருமடத்துக்குச் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார்.

திருவாவடுதுறை கோயில்..

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட மூலனின் மனைவி இல்லம் திரும்பினாள். மறுநாள் தன் சுற்றத்துடன் வந்து, திருமூலருடன் வாதிட்டாள். அவளுடன் வந்திருந்தவர்கள், சிவயோகத்தில் இருப்பது மூலன் அல்ல, அவர் ஒரு முனிவர் என்பதை உணர்ந்து, மூலனின் மனைவியிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவளும் யதார்த்தத்தை உணர்ந்து, திருமூலர் திருவடிகளில் விழுந்து வணங்கி, இல்லம் திரும்பினாள்.

திருமூலர் தனது யோகநிலை தெளிந்து, தான் மறைவாக வைத்திருந்த தனது (சுந்தரநாதர்) உடலைத் தேடினார். உடல் அங்கு இல்லை என்பதை அறிந்த திருமூலர் வியப்புற்றார். இறைவன் அருளிய ஆகமப் பொருளை தமிழில் வகுத்து, உலகோருக்கு உணர்த்த, சிவபெருமானே திருமூலரது உடலை மறைத்தருளினார் என்பதை தன் தபோ வலிமையால் உணர்ந்தார்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும் தொகுத்தும், விரித்தும் கூறும் நல்ல திருமந்திர மாலையை ஓர் ஆண்டுக்கு ஒரு மந்திரப் பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவ யோகத்தில் அமர்ந்து, மூவாயிரம் திருமந்திரங்கள் அடங்கிய திருமுறையைப் பாடினார்.

திருமூலர்

பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக விளங்குவது தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் திருமந்திரமாலை ஆகும். ஆகமங்களின் சாரமாக விளங்கும் இப்பாடல்கள் ஒன்பது உட்பிரிவுகளுடன் அமைந்துள்ளன. இப்பாடல்களை, வைகறையில் எழுந்து கருத்தறிந்து ஓதுபவர்கள் பிறவிப் பாசம் நீங்கி பரமன் அருள்பெறுவர் என்பது ஆன்றோர் வாக்கு.

சிவயோகத்தில் நிலைத்து நின்ற திருமூல நாயனார், இதய கமலத்தில் எழுந்தருளிய எம்பெருமானுடன் ஒன்றினார். முக்கண்ணனின் பொற்றாமரைப் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒப்பற்ற பெருவாழ்வைப் பெற்றார்.

‘தம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 16

x