திருநள்ளாறு கோயிலில் திடீரென கொடிமரம் முறிந்ததால் பிரம்மோற்சவ கொடியேற்று விழா நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்றவராவார். இக்கோயிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இந்த பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர்.

பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்ற விழா தொடங்குவதற்காக பூஜைகள் இன்று காலையில் நடைபெற்றது. இதன் பின் கொடியேற்றிய போது, திடீரென கொடிமரம் முறிந்து சேதமடைந்தது. இதனால் பிரம்மோற்சவ விழா நிறுத்தப்பட்டது.
உரிய பாராமரிப்பு இல்லாத காரணத்தால் தான், கொடிமரம் முறிந்ததாக பக்தர்கள் கோயில் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருநள்ளாறு பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவில்லை. இதனால் பக்தர்கள் வருத்தமடைந்தனர். இதனால் மாற்று ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்தது.