திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பிறந்த உருத்திர பசுபதி நாயனார், வேதத்துக்கு கண்ணாக விளங்கும் திரு உருத்திர மந்திரத்தை தூய உள்ளத்துடன் நாள் முழுவதும் ஜபிக்கும் நியமத்தை மேற்கொண்டவர். சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
சோழ நன்னாட்டில் திருத்தலையூர் என்ற ஊரில் மறையவர்கள் (வேத விற்பன்னர்கள்) பலர் வசித்து வந்தனர். இவர்கள் தினமும் பல வேள்விகள் நடத்தி, நீதிநெறி தவறாமல், தர்ம சிந்தனையுடன் வாழ்ந்து வந்தனர்.

(திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் மாவாட்டுக்குடியை அடுத்துள்ள ஊர் திருத்தலையூர்)
வேதவொளி சிறப்புற்றதால், இங்கு வானம் நன்கு பொழிந்தது. நறுமலர்ச் சோலைகள் தேன் பொழிந்தன. நகரமக்களும் சீரும் சிறப்புமாக, அறநெறி தவறாது, நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தனர் என்று சேக்கிழார் பெருமான் திருத்தலையூர் சிறப்பை விளக்குகிறார்.
மறையவர் குலம் சிறக்க, உருத்திர பசுபதியார் என்ற சிவனடியார் அவதரித்தார். சிவபக்தியில் சிறந்து விளங்கிய இவர், இனிய பறவைகளும், வண்டுகளும் இருந்து இன்னொலி செய்யும் தாமரைப் பொய்கையில், கழுத்தளவு நீரில் நின்று, இரு கரங்களையும் சிரத்தின்மீது கூப்பி, வேதத்தின் கண்மலர் என்று அழைக்கப்படும் உருத்திர மந்திரத்தை ஜபிப்பார். காலை தொடங்கி உச்சி வரையிலும், மாலையிலும் மிகுந்த உறுதியுடன் இவ்வழக்கத்தை மேற்கொண்டு வந்தார். இதன் காரணமாகவே உருத்திர பசுபதியார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார்.

ருக், யஜூர், சாம, அதர்வணம் என்று வேதங்களை நான்காக பிரித்து கூறுவர். யஜூர் வேதம் ஏழு காண்டங்களை உடையது. இடையில் உள்ள காண்டத்துள் 11 அனுவாகங்களைக் கொண்டது திரு உருத்திரம். இதன் இடையில் பஞ்சாக்கரமும், அதன் இடையில் சிகாரம் விளங்குகிறது. வேத இதயம் சிவ பஞ்சாக்கரம், வேதத்தின் கண் திரு உருத்திரம், கண்மணி திருவைந்தெழுத்து என்று கூறப்படுகிறது.
ருக் என்றால் துன்பம் என்றும், திரன் என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் காரணமாக, இறைவன் ருத்திரன் என்ற திருநாமம் பெற்றார். இறைவன் எல்லாமாக, எங்கும் இருந்து அருள் புரிபவன் என்பதை உணர்த்துவது உருத்திர மந்திரம் என்று அறியப்படுகிறது.
அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் பெருமானால் போற்றப்படும் இத்திரு மந்திரத்தை தமது பேச்சாகவும், மூச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். இவரது பக்தியை பற்றி ஊரில் உள்ளவர்கள் அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமாக இருந்தனர்.

பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திரு உள்ளத்தை மகிழச் செய்தது. பசுபதியாருக்கு பேரருள் புரிய எண்ணிய சிவபெருமான், அவரை சில காலமே இவ்வுலகில் இருக்க வைத்து, தன்னுடைய திருவடி அருகில் இருக்கும் பேற்றை அளித்தார்.
‘உருத்திர பசுபதிக்கு அடியேன்’
******
2.சிறப்புலி நாயனார்
திருவாக்கூரில் அந்தணர் குலத்தில் பிறந்த சிறப்புலி நாயனார், சிறந்த வள்ளலாக இருந்து, சிவபெருமானிடத்து அளவு கடந்த பக்தி கொண்டு, சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்து வந்தவர். எந்நேரமும் ஐந்தெழுத்தோதி, சிவ வேள்வி புரிவார்.
சோழவள நாட்டில் அனைத்து வளங்களையும் உடைய தலமாக திருவாக்கூர் விளங்கியது. குளிர்ந்த சோலைகள், வானளாவிய மாட மாளிகைகள், மழை முழக்கத்தை விஞ்சிய மறை முழக்கம், அகில் சந்தன மரங்களில் இருந்து வரும் நறுமணத்தை அடக்கும் வேள்விப் புகை என்று திருவாக்கூர் சிறப்புற்று விளங்கியது.

திருவாக்கூர் (திரு ஆக்கூர்) மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே தரங்கம்பாடி செல்லும் வழியில் 15 கிமீ தொலைவில் உள்ளது. இத்தலத்தில் இருந்து கிழக்கே 5 கிமீ தொலைவில் திருக்கடவூர் உள்ளது. இங்குள்ள மாடக்கோயில் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோயிலில் சிவபெருமான் தான்தோன்றீஸ்வரராக வான்நெடுங்கண்ணி அம்பாளுடன் அருள்பாலித்து வருகிறார்.
பாக்கு மரங்கள் சூழ்ந்த திருவாக்கூரில் வேதங்கள் பயின்றவராக, சிவபெருமானை வணங்கி, சிவனடியார்களுக்கு தொண்டு புரியும் வள்ளலாக, சிறப்புலி நாயனார் என்ற அடியார் வசித்து வந்தார். சிவனடியார்களைக் கண்டதும், அவர்கள் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிய சொற்கள் பேசி, அறுசுவை உணவூட்டி, அவர்கள் விரும்பிய அனைத்தும் தந்து பெரிதும் மகிழ்பவராக சிறப்புலியார் விளங்கினார்.
சிவ பஞ்சாட்சர மந்திரத்தை எந்நேரமும் ஓதி, சிவபெருமானுக்காக வேள்விகள் வளர்த்தும் இடைவிடாது சிவப்பணி புரிந்தார். சிறப்புலியாரின் பக்தியை ஊர் மக்கள் மெச்சினர். அவர்களும் சிறப்புலியாரைப் போல் சிவபெருமானிடம் பக்தி செலுத்த முயற்சித்தனர். சிவனடியார் தொண்டு புரியவும் எண்ணினர். ஊர்மக்கள் முன்னர் உதாரண புருஷராக விளங்கினார் சிறப்புலியார்.

தம்மிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் ஈசன் தந்தது என்று எண்ணி, அச் செல்வத்தை ஈசனடியார்களுக்கு தொண்டு புரிய பயன்படுத்தினார் சிறப்புலியார். சிவனடியார்களுக்கு தருகிறோம் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. அடியார்களுடைய சிறந்த பண்பு வள்ளல்தன்மையாகும். உலோப குணத்திலும் இழிந்தது வேறு இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.
பெரிய வள்ளல்தன்மையுடன் தன்னிடம் உள்ள பொருட்களை, அடியார்கள் கேட்கும் முன்பே வழங்கி சிறப்பு செய்ததால் சிறப்புலி நாயனார் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கூற்று உள்ளது. சேக்கிழார் பெருமான் சிறப்புலியாரை சிறப்பித்து கூறும்போது, ‘வள்ளலார்’ என்றே குறிப்பிடுகிறார்.
சிவனடியார்களிடத்து இணையற்ற அன்புடைய சிறப்புலி நாயனார், எண்ணிலாத அறங்களைப் புரிந்து அம்பலவாணர் திருவடி நிழலில் கலந்து பேரின்பப் பெருவாழ்வு பெற்றார்.
‘சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலியாருக்கு அடியேன்’
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...
சிவனருள் பெற்ற அடியார்கள் – 14