சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் வாயிலார் நாயனார். இவர் எந்நேரமும் சிவபெருமானை மனதில் இருத்தி வழிபடுபவர். அடியார்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்பவர்.

தொண்டை நாட்டில் மயிலாப்பூர் என்ற ஊர் சிறப்புற்று விளங்குகிறது. புன்னை மரத்தின் கீழ் மயில் உருவில், பார்வதி தேவி, தவம் இருந்து சிவபெருமானை பூசித்ததால் இவ்வூர் மயிலாப்பூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வூரில் செல்வ வளமிக்கவர்கள் மாட மாளிகைகள் கட்டி வசித்து வருகின்றனர். இதனால் கடல் வளம், தெய்வ வளம், செல்வ வளத்தையும் மயிலாப்பூர் பெற்றதாக போற்றப்படுகிறது.
இக்கோயில் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில், 257-வது திருத்தலம் ஆகும். இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு.
சென்னை கபாலீஸ்வரர் கோயில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது ‘திருமயிலை’ என்றும் ‘கபாலீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

முருகப் பெருமான் மயிலை நாதனை வழிபட்டு சக்தி வேல் பெற்றார். பிரம்மதேவர் சிவபெருமானை வழிபட்டு, தனது ஆணவம் நீங்கப் பெற்று தனது படைப்பாற்றலைப் பெற்றார். சுக்கிரன் பூஜித்ததால் இத்தலம் ‘சுக்கிரபுரி’ என்றும், நான்மறைகள் பூஜித்ததால் இத்தலம் ‘வேதபுரி’ என்றும் அழைக்கப்படுகிறது. ராமபிரான் இப்பகுதியில் தங்கியிருந்து திருவிழா நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் எலும்பைப் பூம்பாவை ஆக்கியது இத்தலத்தில்தான். ஆளுடையப் பிள்ளையின் (திருஞானசம்பந்தர்) தேவாரம் பெற்ற தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலமாக மயிலாப்பூர் இருப்பதால், வைணவர்களும் கொண்டாடும் தலமாக மயிலை விளங்குகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழ் அருளப்பட்ட தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இந்தியா வந்திருந்தார். அவர் இத்தலத்தை ‘மல்லியார்பா’ என்று அழைத்துள்ளார். மயில்கள் நிறைய ஆர்த்தெழுந்த காரணத்தால் ‘மயில் ஆர்ப்பு’ என்றும் அதுவே பின்னாட்களில் ‘மயிலாப்பூர்’ என்று ஆனதாகவும் கூறப்படுகிறது.
பிரம்மதேவருக்கும் சிவபெருமானைப் போல ஐந்து தலைகள் இருந்தபோது, அவர் மிகுந்த செருக்குடன் இருந்தார். அப்போது அவரது நடு சிரத்தைக் கிள்ளி எறிந்தார் சிவபெருமான். அப்போது பிரம்மதேவரின் கபாலம் சிவபெருமானின் கைகளில் ஒட்டிக் கொண்டது. கபாலம் ஏந்திய ஈஸ்வரன் என்பதால் ‘கபாலீஸ்வரன்’ என்ற பெயரைப் பெற்றார் சிவபெருமான். இத்தலமும் ‘கபாலீஸ்வரம்’ என்ற பெயரைப் பெற்றது. கேட்ட வரத்தை அளிக்கும் தேவலோகத்து கற்பக மரம் போல, இத்தலத்து அம்பிகையும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதால் ‘கற்பகாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், பார்வதி தேவி, ராமபிரான் ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
மயிலாப்பூர் கோயிலில் அறுபத்து மூவர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனித் திருவிழாவின் எட்டாம் திருநாளில் வெள்ளி வாகனத்தில் கபாலீஸ்வரர் திருவீதி உலா வர, அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பவனி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் என்று புலவர் பெருமக்கள் கூறுவர்.

அடியவர்களும் இறைவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றும் இந்த விழாவில் எங்கு திரும்பினாலும் பக்தர்களே நிறைந்து காணப்படுவர். இது எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படும் விழா என்று கூறப்படுகிறது.
மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தோன்றிய வாயிலார் என்பவர் சிறந்த சிவனடியாராக இருந்து வந்தார். தன்னைப் போல் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு தேவையானவற்றை செய்து தரக்கூடிய உள்ளம் படைத்தவராக இருந்தார். தினமும் சிவாலயம் சென்று வழிபடுவதையே தனது முதல் கடமையாக நினைத்துக் கொண்டிருந்தார்.

காலப்போக்கில் அவரது மனம் புற வழிபாட்டில் ஈடுபட மறுத்தது. வழிபாட்டில் இருவகை உண்டு. அது அக வழிபாடு மற்றும் புற வழிபாடு ஆகும். அகவழிபாடு இல்லாத புற வழிபாடு பயனற்றது. சிவபூஜையில் அந்தர் யாகம் என்றழைக்கப்படும் யாகத்தை செய்யாவிட்டால், அந்த சிவபூஜை சிறப்பு பெறாது. வாயிலாரின் மனம் அக வழிபாட்டிலேயே சென்றது. இறைவனை என்றும் மறவாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அவரையே மனதில் நினைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மனதில் இருத்திக் கொண்டார். இதனால் வாயிலார் ‘தபோவனர்’ என்றே சேக்கிழார் பெருமானால் அழைக்கப்படுகிறார்.
தனக்குள்ளே மனக் கோயில் ஒன்றை எழுப்புகிறார் வாயிலார். அக்கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்கிறார். தம் உணர்வால் விளக்கேற்றுகிறார். இடையறாது ஆனந்தம் கொண்டதால், அந்த ஆனந்தத்தால் இறைவனை திருமுழுக்காட்டுகிறார். அன்பைத் தவிர சிறந்த அமுது ஏதும் இல்லை என்பதால், அன்பையே உணவாக நிவேதனம் செய்து, இறைவனை அர்ச்சித்து வழிபாடு செய்கிறார்.

பிறப்பும், இறப்பும் இல்லாதவரே என்று சிவபெருமானை போற்றி அவரது திருவடிகளில் விழுந்து வணங்குகிறார். இந்த செயல் தினமும் நடைபெற்றது. மனக்கோயிலில் தூய்மைப் பணி மேற்கொண்டார். அங்குள்ள தீர்த்தக் குளத்தையும் தூய்மைப் படுத்தினார். எந்நேரமும் சிவத் தொண்டு புரிந்து கொண்டிருந்தார். ஞான மார்க்கமே சிறந்தது என்பதை மனதில் இருந்தி, அதை தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் வலியுறுத்தி வந்தார். நீண்ட நாள் ஈசனைப் போற்றி அவரது திருவடி நிழலில் இளைப்பாறினார். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்’
முத்தைய அத்தியாயத்தை வாசிக்க...
சிவனருள் பெற்ற அடியார்கள் – 13