முடியல முருகா... ஒரு கோடி ரூபாய் கடனை தீர்த்து வை முருகா! - கடிதம் மூலம் கோரிக்கை வைத்த பக்தர்


தனக்கு இருக்கும் ஒரு கோடி ரூபாய் கடனையும் தீர்க்க வேண்டும், தனக்கு வர வேண்டிய 10 கோடி பணத்தையும் திருப்பி வர வைக்க வேண்டும் என்று துண்டு சீட்டில் எழுதி கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் போட்டுச் சென்ற விநோதமான சம்பவம் தருமபுரியில் நடந்துள்ளது.

கோப்புப்படம்

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வழக்கமாக தங்களது வேண்டுதல்களை கடவுளிடம் வைப்பார்கள். மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். இங்கே ஒரு பக்தர் கடவுளிடம் வேண்டுதலை வைத்தது மட்டுமில்லாமல், அதனை துண்டுச் சீட்டில் எழுதி உண்டியல் போட்டுச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட ஒரு சம்பவம், தருமபுரி குமாரசாமிப்பேட்டயைில் சிவசுப்பிரமணியர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது நடந்துள்ளது. பணம் நோட்டுகள், தங்கம், வெள்ளி பொருட்களுக்கு மத்தியில் ஒரு வெள்ளைக் காகிதம் கிடைத்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது, ஒரு பக்தர் தனக்குள்ள கடன் குறித்தும், பிறர் தனக்கு தரவேண்டிய கடன் குறித்தும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், தான் யார் என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.

பக்தரின் கடிதம்

கடன் கொடுக்க வேண்டிய நபரின் பெயரும், தொகையும் வரிசையாக எழுதியுள்ளார். அதில், மொத்தமாக 1 கோடியே 43 லட்தத்து 50 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்றும், இந்த கடன் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் என்றும், தனக்கு சிலரிடம் இருந்து வர வேண்டிய ரூ.10 கோடியே 10 லட்சம் விரைந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக, கடிதத்தின் இறுதியில், காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடைகள் நீங்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்று கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளையும் எழுதி, முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று மனமுருகி கோரிக்கை வைத்துள்ளார். இந்த பக்தரின் கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் ஜாலி ஆபீஸ்!

x