திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்


படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கைக்குழந்தையுடன் பறவைக்காவடி எடுத்த பக்தர், அலகுகள் குத்தி மெய்சிலிர்க்க வைத்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 13-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்பின் மீண்டும் உற்சவர் சன்னதியை அடைவார். முக்கிய விழாவான வைகாசி விசாகத்தன்று மட்டும் ஆண்டுக்கொருமுறை சண்முகர் சன்னதியிலிருந்து கம்பத்தடி மண்டபம் அருகிலுள்ள விசாகக்குறடில் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள்வர். அதன்படி இன்று வைகாசி விசாகத்தன்று அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் சண்முகர் சன்னதியிலிருந்து புறப்பட்ட சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு அபிஷேகம், தீப, தூப ஆராதனைகள் நடந்தது. அதன்பின் அங்கிருந்து புறப்பாடாகி கம்பத்தடி மண்டபம் அருகில் விசாகக்குறடில் சுவாமி எழுந்தருளினார். அங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களிலிருந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.

வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி, இளநீர் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் பறவைக்காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதில் சில பக்தர்கள் உடல் முழுவதும் வேல்அலகு குத்தியும், வாயில் அலகுகள் குத்தியும், நாக்கில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து மாலை 4 மணியளவில் சண்முகர் சன்னதியை அடைந்தார். பக்தர்கள் கொண்டுவந்த பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருவீதியுலா நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (மே.23) மொட்டையரசு திருவிழா நடைபெறும். தங்கக்குதிரை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு, தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்புள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளி, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்பின்பு மாலையில் பூப்பல்லக்கில் பக்தர்கள் அருள்பாலித்து இரவில் கோயிலை அடைவர்.

வைகாசி விசாகத்தை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 3 துணை ஆணையர்கள், 9 உதவி ஆணையர்கள், 23 இன்ஸ்பெக்டர்கள். 40 எஸ்ஐக்கள் உள்பட மொத்தம் 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருவாச்சி மண்டபம் ஆறுகால் பீடம், உற்சவர் சன்னதி முன்பு பக்தர்கள் வசதிக்காக 10 டன் ஏசி வசதி செய்யப்பட்டது. கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர்குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். மாநகராட்சி மண்டலத்தலைவர் சுவிதா விமல் தலைமையில் குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

x