[X] Close

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: பெருமாளே தோப்புக்கரணம் போட்டிருக்கார்!


vinayaga-chadhurthi

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 12:29 pm
  • அ+ அ-

  ஸ்ரீமகாவிஷ்ணு, தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அந்தச் சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ, அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமால், வேறு ஒரு வலிமையான ஆயுதம் பெறுவதற்காக, சிவபெருமானை வழிபடச் சென்றார்.

   அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு விறுவிறுவென உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு  கடும் கோபம். இதை அறியாத மகாவிஷ்ணு, சிவனைப் போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களைக் கொண்டு, சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்து பூஜித்துக் கொண்டிருந்தார்.

  இதில் மகிழ்ந்த சிவபெருமான் முன்பு ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க, தன் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை மகாவிஷ்ணுவுக்கு  தந்தருளினார்.  

பிறகு மகாவிஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி, தம் வாயில் போட்டுக் கொண்டார்.

   அதைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காமல் சென்றது தவறு என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து  தோப்புக்கரணமிட்டார். தோர்பி கரணம் என்பதே தோப்புக்கரணம் என்றானது.

இதைக் கண்டு, தன் தொப்பை குலுங்கச் சிரித்தார் ஆனைமுகத்தான்.   அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு என்கிறது புராணம்!

ஆனானப்பட்ட, திருமாலே விநாயகரை தோப்புக்கரணமிட்டு வணங்கி, சக்ராயுதம் பெற்றிருக்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? எனவே, நாளைய விநாயக சதுர்த்தி தினத்தில் (13.9.18) தோப்புக்கரணமிட்டு தும்பிக்கையானை வேண்டுவோம். நம்பிக்கை மிளிர வாழச் செய்வான் கணபதி பெருமான்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close