[X] Close

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: கிருஷ்ணரும் சந்திரனும் வழிபட்ட பிள்ளையார்!


vinayagar-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 09:50 am
  • அ+ அ-

 கணபதி பெருமான்.  சிவனார், தன் மைந்தன் விநாயகரைக் கணங்கங்களின் தலைவனாக நியமித்தார். அதனால், அவருக்கு கணபதி எனும் திருநாமம் அமைந்தது. அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டஸித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு போற்றி வணங்கினார்  என்கிறது புராணம்.

  அதில் மகிழ்ந்த கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறு இல்லாமல் நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.

    பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பினார். உலகெல்லாம் சுற்றினார்.  சந்திரலோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகப் பெருமானைக் கண்டனர்.

உடனே  சந்திரன் வாய் விட்டுச் சிரித்தான். பரிகசித்தான். கேலி பண்ணினான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படும்’ என்று சபித்தார். சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலருக்குள் மறைந்தான்.

     சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் பிரம்மா, நானோ, சிவபெருமானோ, மகா, விஷ்ணுவோ ஒன்றும் செய்ய முடியாது என்றும், கணபதியைச் சரணடைவதுதான் ஒரே வழி என்றும் கூறினார்.

  மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை விநாயகப் பெருமானுக்கு அளித்து, ஆச்சார்யப் பெருமக்களுக்கு தாம்பூல, தட்சணை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார்.

   பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த பூஜை செய்தார்.  கணபதியும் மகிழ்ந்தார்.  பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்து அருளினார்.  சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!

“தவம் காரணம் காரண காரணாநாம்

க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“ என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

  பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு சாப விமோசனமும் பாப விமோசனமும் தந்து அருள்வேன்’ என்று விநாயகரே அருளினார். இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது.

   பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்! எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை அமைத்து பூக்களால் பூஜித்த பின், இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’ என்று விநாயகப் பெருமானே, சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

   சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு, நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல, ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!

இதோ... நாளைய தினம் விநாயக சதுர்த்தி (13.9.18 வியாழக்கிழமை). ஆனைமுகத்தானை வணங்குவோம். அருளும்பொருளும் வரமாய்ப் பெறுவோம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close