கடைமுக தீர்த்தவாரி... மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நவ. 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


ஐப்பசி மாத கடைமுக தீர்த்தவாரி

ஐப்பசி மாத கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 25ம் தேதி பணிநாளாக செயல்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அபயாம்பிகை உடனமர் ஸ்ரீமயூரநாதர்

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1ம் தேதி துலா உற்சவம் தொடங்கியது. கடைமுழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில், மிக முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது.

கடைமுக தீர்த்தவாரி

மாதம் முழுவதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30ம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம். இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

x