திருப்பூர் மாவட்டம், சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாண்டு அரிசியின் விலை மேலும் உயருமா என பக்தர்களிடையே கருத்து நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது தொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்குமாறு கூறுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
ஆண்டவன் குறிப்பிட்ட பொருளை பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்தும் வருகிறது. பக்தர் ஒருவர் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வதனின் அடிப்படையில், பக்தர் கூறும் தகவலை அர்ச்சகர்கள் சுவாமி சன்னிதானத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் கண்ணாடி பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை ஆகியவை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளன.
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்களின் காரணமாக நாட்டில் அந்த பொருள் தொடர்பாக பெரும்பாலும் ஆக்கம் அல்லது அழிவு போன்ற செயல்கள் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. உதாரணமாக தங்கம் வைத்து பூஜை செய்தபோது அதன் விலை உச்சத்தை தொட்டது. மண் வைத்து பூஜை செய்தபோது நிலங்களின் மதிப்பு அதிகமானது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்டபோது சுனாமி ஏற்பட்டது. கணக்கு நோட்டு வைத்து பூஜை செய்தபோது மத்திய அரசு கருப்புப் பணஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதனால் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து அவ்வப்போது பொது மக்களிடையே பரபரப்பு நிலவுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று, ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் நிறைபடி நெல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் மீண்டும் தற்போது நெல் வைக்கப்பட்டு இருப்பதால், அரிசியின் விலை உயரும் அல்லது குறையும் என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.