நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் 11 நாள் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இன்று அதிகாலை அய்யாவிற்கு பணிவிடையும், அதைத் தொடர்ந்து கொடிப் பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சாமித்தோப்பு தலைமைகுரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் தலைப்பாகையும், காவி உடையும் தரித்தவாறு 'அய்யா... அரகர சிவ சிவா...' என்று பக்தி கோஷம் முழங்கினர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இனிமமும், அன்னதர்மமும் வழங்கப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின்பு நடைபெற்ற பணிவிடைகளை குருக்கள் பாலஜனாதிபதி, லோகாதிபதி மற்றும் பலர் செய்தனர். மாலையில் தொட்டில் வாகனத்தில் அய்யா பதியை பவனி வந்தார்.
8ம் திருவிழாவன வருகிற 30ம் தேதி அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலவேட்டையாடும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான செப்டம்பர் 2ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் அன்று நள்ளிரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.