பால ராமரை தரிசிக்க அயோத்திக்கு 6 நாட்கள் பாதயாத்திரை... 350 இஸ்லாமியர்கள் பங்கேற்பு!


அயோத்தி ராமர் கோயில்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து பாதயாத்திரையாக ஆறு நாட்கள் நடந்து வந்து அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பால ராமரை 350 இஸ்லாமியர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

பாதயாத்திரை வந்த இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த இந்த இஸ்லாமியர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பான முறையில் பாதயாத்திரை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்காக அந்த அமைப்பில் இருந்து 350 இஸ்லாமியர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கடந்த 25-ம் தேதி லக்னோவில் இருந்து தங்கள் பாத யாத்திரையை அவர்கள் தொடங்கினர்.

ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் வரும்போதும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டனர். பிறகு புறப்பட்டு நடப்பார்கள். இரவு நேரங்களில் ஓரிடத்தில் பாதுகாப்பாக தங்கிவிடுவார்கள். பிறகு காலையில் எழுந்து மீண்டும் பாத யாத்திரையை தொடர்வார்கள். இவ்வாறு 150 கிலோ மீட்டர் தொலைவை கடும் குளிருக்கு மத்தியில் 6 நாட்களில் கடந்து அயோத்திக்கு நேற்று வந்தனர். அங்கு அவர்கள் பால ராமரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அயோத்தி வந்த இஸ்லாமிய குழுவினர்

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் சயீத், "அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயிலில் உள்ள பால ராமரை தரிசித்து வழிபட்டோம். இது மறக்க முடியாத நெகிழ்ச்சியூட்டும் தருணம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, நல்லிணக்கம் ஆகியவையே மிகவும் முக்கியம் என்ற செய்தியை நாங்கள் இதன்மூலம் தெரிவிக்கிறோம்" என்று கூறினார்.

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவருமான ஷெர் அலி கான், "பகவான் ராமர் நமது முன்னோர். நம் அனைவருக்குமே அவர் முன்னோர். சாதி, மதம் ஆகியவற்றைவிட நாட்டின் மீதான அன்புக்கும் நல்லிணக்கத்துக்குமே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எந்த ஒரு மதமும் மற்றவர்களை விமர்சிக்கவோ, கேலி செய்யவோ, வெறுக்கவோ கற்றுத்தரவில்லை" என்றார்.

x