அயோத்தி ராமர் கோயிலுக்கு போறீங்களா?... மறக்காம இந்த இடங்களுக்கும் போயிட்டு வாங்க!


அயோத்தி கோயில் மற்றும் சுற்றுலா மையங்கள்

அயோத்தி ராமர் கோயிலை சுற்றிலும் மிக முக்கியமான கோயில்களும், சுற்றுலா மையங்களும் உள்ளன. அவற்றை பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22ம் தேதி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த முக்கிய பூஜையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வத், உத்தரப்பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். மேலும், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 23ம் தேதி முதல் அயோத்தியில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஹனுமன் காரி

இந்நிலையில், அயோத்தியை சுற்றிலும் மிக முக்கியமான கோயில்களும், சுற்றுலா மையங்களும் உள்ளன. அவற்றை பற்றிய தகவல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அயோத்தி ராமர்கோயிலுக்கு அடுத்து முக்கியமாக தரிசிக்க வேண்டியது ஹனுமன் காரி என்ற கோயில். ராமர் கோயிலுக்கு மிக அருகில் இந்த ஆலயம் உள்ளது. 76 படிகளைக் கொண்ட இந்த கோயில் மிக முக்கியமான புண்ணிய தலமாக விளங்குகிறது. அடுத்ததாக கனக் பவன், இந்த ஆலயம் தசரத சக்கரவர்த்தியின் மனைவிகளில் ஒருவரான கைகேயியால் ராமருக்கும், சீதாவுக்கும் அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனை ஒட்டி ஒரு சிறிய அருங்காட்சியகமும் உள்ளது.

சராயு நதி

அடுத்ததாக பக்தர்கள் பார்க்க வேண்டியது நாகேஸ்வரநாத் கோயில். அயோத்தி நகரில் அமைந்துள்ள மிகப்பழமையான சிவ ஆலயங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த கோயிலில் உள்ள லிங்கத் திருமேனியை ராமரே பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அதற்கு அடுத்தபடியாக ராமர் கட் அல்லது சராயு ஆரத்தி. அயோத்தியில் அமைந்துள்ள சராயு நதிக்கரையோரம் மாலை வேளையில் நடைபெறும் மங்கள ஆரத்தியும், பாடல்களும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடியவை.

இதைத்தொடர்ந்து காண வேண்டியது குப்தர் கட், இங்குதான் ராமர் ஜலசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் நீராடுவது அயோத்தியின் ஆன்மிக மனத்துடன் இணைவதற்கு சமம் என சொல்லப்படுகிறது.

துளசி தாசர் பவன்

அயோத்தியில் அமைந்துள்ள சுற்றுலா மையங்களில் ஒன்று குலாப் பாரி, இங்குள்ள ரோஜாக்களும், வரலாற்று கட்டிடங்களும் சுற்றுலா பயணிகளுக்கு மன அமைதியின் அனுபவத்தை தரக்கூடியது.

அதற்கடுத்ததாக கனக் பவன் அருங்காட்சியகம். இங்கு அயோத்தியின் பண்டைய கால கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ராமரின் புகழை மட்டுமே பாடி தன் வாழ்நாளை கழித்த துளசிதாசரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள துளசி சமரக் பவன். இங்கு துளசி தாசரை பற்றிய தகவல்களும், அவரது பாடல்களும் அமைக்கப்பட்டுள்ளது. இது அயோத்தி செல்பவர்கள் மறக்காமல் செல்லக்கூடிய ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக தசரத் மகால் இது ராமரின் தந்தையும், அயோத்தியின் மன்னருமாக இருந்த தசரதரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிட வடிவமைப்பும், வரலாற்று தன்மையும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தி சென்ற காரின் கண்ணாடிகள் திடீரென நொறுங்கியது... மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

x