அயோத்தியில் ராமர் கோயிலை அடுத்து, அதன் வளாகத்திற்கு உள்ளும், வெளியிலுமாக 13 கோயில்களை உருவாக்க ராம ஜென்மபூமி அறக்கட்டளையினர் திட்டமிட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பணிகள் முழுமையடையாத போதும் ஜன.22 அன்று அங்குள்ள பால ராமருக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூன்று அடுக்குகளாகத் திட்டமிடப்பட்ட ராமர் கோயிலின் முதல் அடுக்கான தரைத்தளம் மட்டுமே தற்போது தயாராகி உள்ளது. இதன் அடுத்த கட்டமாக இன்னும் இரண்டொரு வருடங்களில், ராமர் கோயிலுக்கான பணிகள் முழுமையாக நிறைவடைய இருக்கின்றன.
இவற்றின் மத்தியில் ராமர் கோயிலை முன்னிட்டு, அதன் வளாகத்தின் உள்ளும், வெளியிலுமாக 13 புதிய கோயில்களை உருவாக்க ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையினர் முடிவு செய்துள்ளனர்.
குடமுழுக்கு கண்ட ராமர் கோயிலின் அடுத்த 2 தளங்களுக்கான பணிகளோடு, ராமர் பரிவாரத்தின் ஐந்து முக்கிய கோவில்களுக்கான பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால், கணபதி, சிவன், சூரியன், ஜகதம்பா தேவி என 4 கோயில்கள், பிரதான கோயிலின் நான்கு மூலைகளிலும் எழ உள்ளன. இவை தவிர்த்து ராமரின் பிரதான சேவகரும், பக்தருமான அனுமாருக்கு தனி ஆலயமும் அமைக்கப்பட உள்ளது.
இந்த கோயில்களில் சிலைகள் நிறுவப்படுவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த 5 கோயில்களுடன் ஆறாவதாக அன்னபூர்ணா தேவிக்கு என அர்ப்பணிக்கப்பட்ட கோயிலும் வளாகத்தின் உள்ளே அமைய உள்ளது. இந்த வகையில் மொத்தம் 6 கோயில்கள், அயோத்தி ராமர் கோயில் வளாகத்தினுள் அமைகின்றன.
இவற்றுக்கு அப்பால் கோயில் வளாகத்திற்கு வெளியே, தனி பரப்பில் பிரம்மாண்டமான 7 கோயில்கள் உருவாக இருக்கின்றன. இவை ராமரின் அவதார வாழ்வில் பங்கு கொண்டோருக்காக அர்ப்பணிக்கப்பட இருக்கின்றனர். வால்மீகி, வசிஸ்டர், விஸ்வாமித்திரர், சிவனின் சகோதரியாக கருதப்படும் தேவி அசாவரி ஆகியோருடன் ராமருக்காகத் தனது உயிரைக் கொடுத்த ஜடாயு என மொத்தம் 7 கோயில்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
இதனிடையே உறைபனியின் குளிரையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான மக்கள் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்காக நெடுந்தொலைவுக்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பால ராமரை வணங்கிச் செல்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தைப்பூசம்... இப்படி வணங்கினால் வாழ்வின் சிக்கல்கள் தீரும்!
பட்ஜெட் 2024: வீட்டுக்கடனில் அதிரடி மாற்றம்... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாற்றங்கள்?!