கோவை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இலை போட்டு, தண்ணீர் வைத்து நீண்ட நேரம் ஆகியும் அன்னதானம் துவங்காததால் பக்தர்கள் எழுந்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை அடுத்த பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த கோயிலில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாலை 5 மணி அளவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான கூடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு 4:30 மணி முதல் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெறுவதில் தாமதமாகி கொண்டே இருந்ததால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக உணவு எதுவும் வழங்காமல், பக்தர்களை வெறும் இலை முன்பு ஊழியர்கள் அமர வைத்திருந்தனர். இதனால் சிலர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளனர். இருப்பினும் உணவு வழங்குவதில் தாமதம் தொடர்ந்ததால், அதிருப்தி அடைந்த பல பக்தர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். பின்னர் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி சுமார் 2:30 மணி நேரம் தாமதமாக நடைபெற்ற அன்னதானத்தில், மிகச் சில பக்தர்கள் மட்டுமே உணவருந்தி விட்டு சென்றனர். நிகழ்ச்சிக்காக உணவு வழங்காமல் பக்தர்களை இலை முன்பு அமர வைத்தது தவறு என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த குளறுபடி பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... பக்தி பரவசமூட்டும் புகைப்படத்தொகுப்பு!
பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!
சிறுக சிறுக பணம் சேமிப்பு... கோவாவிற்கு விமானத்தில் பறந்த பீடி சுற்றும் தொழிலாளர்கள்!
அதிர்ச்சி... கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு!
குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்: நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!