அயோத்தியில் இன்று நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் முன்னாள் துணைப் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி, தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதேநேரம், பிரதமர் மோடியின் வலதுகரமாகவும், அவரது அரசில் உள்துறை அமைச்சர் பதவியை வகிக்கும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இதில் பங்கேற்கவில்லை.
இதற்கு அவரது வீட்டில் நிகழ்ந்த துக்க சம்பவம் காரணமாக சொல்லப்பட்டது. அமித்ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரிபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதனால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது.

ஆனால் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அயோத்திக்கு நேரில் வராமல் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று மக்களுடன் சேர்ந்து அன்றைய தினத்தில் வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதை ஏற்று டெல்லியில் உள்ள பிர்லா மந்திர்க்கு இன்று சென்ற அமித்ஷா, அங்கு மக்களுடன் சேர்ந்து வழிபாடு நடத்தினார். அதேபோல பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான அத்வானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. உத்தரப் பிரதேசத்தில் கடுமையான குளிர் நிலவுவதால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே டெல்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப் என வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இது மேலும் சில நாட்கள் தொடரும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 96 வயதான அத்வானி, உ.பி.யில் கடும் குளிர் நிலவுவதன் காரணமாக ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... பக்தி பரவசமூட்டும் புகைப்படத்தொகுப்பு!
பகீர்... காரில் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ரூ.1.90 கோடி ஹவாலா பணம் கடத்தல்: இருவர் கைது!
சிறுக சிறுக பணம் சேமிப்பு... கோவாவிற்கு விமானத்தில் பறந்த பீடி சுற்றும் தொழிலாளர்கள்!
அதிர்ச்சி... கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு!
குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்: நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!