அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தானிஷ் கனேரியா கொண்டாடும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம், ராமர் விக்ரக பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கோயில் வளாகத்தில் குவிந்துள்ளனர். மேலும், மடாதிபதிகள், சாமியார்கள், தொழிலதிபர்கள், இந்து அமைப்பின் தலைவர்கள் அயோத்தியில் கூடி உள்ளனர்.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பல இடங்களில் எல்இடி திரை மூலம் கும்பாபிஷேக விழா நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தானிஷ் கனேரியா தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தானிஷ் கனேரியாவுக்கு, மரியாதையும் செய்யப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் தானிஷ் கனேரியா. மேலும் பாகிஸ்தான் அணியில் விளையாடிய முதல் இந்து வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் இந்தியா வந்து, அயோத்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.