அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரலையில் ஒளிபரப்புவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை போலீஸார் அகற்றியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இன்று நடைபெறும் கும்பாபிஷேகம் உலகெங்கும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் அயோத்திக்கு நேரில் வராமல் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களுடன் அமர்ந்து கும்பாபிஷேகத்தை நேரலையில் தரிசிக்க வேண்டும், பூஜைகளில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் பங்கேற்று கும்பாபிஷேகத்தைக் காண காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு அவர் மக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பெரிய எல்இடி திரை பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த காஞ்சிபுரம் போலீஸார், அனுமதியின்றி எல்இடி திரை பொருத்தப்பட்டிருப்பதாகக்கூறி அதை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் செய்திருந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திரை அகற்றப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து விரோத திமுக, இந்து மக்களுக்கு எதிரான செயல்களைச் செய்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நேரலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்று அனுமதி பெறும்போது கூறப்பட்டிருந்ததாகவும் அதை மீறி திரை வைக்கப்பட்டிருந்ததால் அது அகற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முற்பிறவியில் செய்த தவத்தின் பயன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ்நாட்டில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை!