அயோத்தி ராமர் கோயில் கருவறையில் பிரதமர் மோடி பிரான பிரதிஷ்டை: வெளியான பரபரப்பு தகவல்கள்!


அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கோயிலுக்குள் எப்போது வருவார், என்னென்ன செய்வார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

இதற்கான பூஜைகள், சடங்குகள் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கியது. கடந்த 17-ம் தேதி கோயில் கருவறையில் 5 வயது பால பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை இன்று முறைப்படி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ராமர் சிலை

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் அவர் உணவாக பழங்களை மட்டுமே எடுத்து கொண்டதோடு, இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். நாடு முழுவதும் உள்ள ராமாயணம் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்த விரதத்தைத் தொடர்ந்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் இன்று பங்கேற்க உள்ளார்.

அதன்படி பிரதமர் மோடி இன்று காலை காலை 10:25 மணிக்கு அயோத்தி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 10.55 மணிக்கு ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வருகிறார். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை அவருக்கென நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தனியே நிகழ்ச்சி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீராமஜென்ம பூமியைச் சுற்றி வந்து பார்வையிடுவார் எனத் தெரிகிறது. அதன்பிறகு மதியம் 12.05 மணிக்கு ராமர் கோயிலுக்குள் வருகிறார். இதையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற உள்ளது. மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த வேளையில் பிரதமர் மோடி கோயில் கருவறையில் பிரான பிரதிஷ்டை சடங்குகளைச் செய்ய உள்ளார். பிரதமர் மோடியுடன் லட்சுமிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழு முக்கிய சடங்குகளை நடத்துகிறது. மொத்தம் 40 நிமிடம் பிரதமர் மோடி ராமர் கோயிலில் இருப்பார்.

அதன்பிறகு ராமர் கோயிலில் இருந்து வெளியே வரும் பிரதமர் மோடி மதியம் 1 மணிக்கு அயோத்தியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கோயில் வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பக்தர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். பிறகு மதியம் 2:10 மணிக்கு குபேர் கா திலா சிவன் கோயிலுக்கு அவர் செல்ல உள்ளார். அதன்பிறகு மதியம் 3.30 மணிக்கு அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

x