பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் அயோத்தி... ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!


அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில்

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்க உள்ளனர்.

ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை 10.30 மணிக்கு வருகிறார். 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க 200 டன்னுக்கும் அதிகமான மலர்கள், 150 டன்னுக்கும் அதிகமான அசோக மரஇலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலர் அலங்கார பணியில் ஈடுபட்டனர். குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக பீகாரில் இருந்து ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மலரிலும் ராமர் உருவம் வரையப்பட்டுள்ளது.

ராமர் கோயில் உட்பட அயோத்தி நகரம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் கருவறை தங்கத்தில் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு கோயில் வளாகம், சரயு நதியின் படித்துறைகள் உட்பட அயோத்தி முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

திறப்பு விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று அயோத்தி நகரில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அயோத்தியின் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஓட்டல், விடுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு, நாளை (ஜனவரி 23) முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அயோத்தியில் நேற்று முதலே குவிந்து வருகின்றனர். இன்றும் 100 தனியார் விமானங்களில் சிறப்பு விருந்தினர்கள் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளனர். அயோத்தியில் ஒரே நேரத்தில் 100 விமானங்களை நிறுத்த முடியாது என்பதால், சிறப்பு விருந்தினர்கள் வரும் விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் லக்னோ விமான நிலையத்திற்கு நேற்றே வந்தார். அவர் இன்று காலை லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் செல்கிறார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நேற்று விமானங்கள் மூலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்கள் லக்னோவில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

x