நெருப்பை மட்டுமே கடவுளாக வணங்கும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோத்தர் இன மக்கள், தங்களது வருடப்பிறப்பை உற்சாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீலகிரியில் வாழும் பண்டைய பழங்குடியின மக்களில் ஒருவர் கோத்தர் இன மக்கள். நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் இவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, திருச்சிக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, சோலூர் கோக்கால், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் தற்போது வசித்து வருகின்றனர். கோத்தர் இன மொழியில் மார்கழி மாதம் ஊடல் மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில், அமாவாசைக்கு அடுத்து தெரியும் முதல் பிறையே இவர்களது வருட பிறப்பாக இருக்கும் என கூறுகின்றனர்.

எனவே அந்த அமாவாசையிலிருந்து ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் விரதம் இருக்கின்றனர். ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் விரதம் இருந்து தனித்தனியாக இறைவனைப் வேண்டுகின்றனர். இறைவனுக்கு பொங்கல் வைப்பதற்கான மண்ணை, பெண்கள் எடுத்து வந்து அவர்கள் கைகளாலேயே மண்பாண்டங்கள் செய்து அதன் மூலம் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.

பின்னர் கல்தூக்கும் நிகழ்வு நடைபெறும். இதில் அந்த கல் எந்த அளவுக்கு மேலே ஏறுகிறதோ அந்த அளவுக்கு மக்களின் முன்னேற்றம் இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து நடனம் ஆடி நெருப்பை மூட்டி தெய்வமாக வழிபட்டனர். உருவ வழிபாடுகளை தவிர்த்து, நெருப்பை மட்டுமே இவர்கள் கடவுளாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.