ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்பட்டுள்ளதைப் போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரை நாள் விடுமுறை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மதுபான கடைகள், இறைச்சி கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, சண்டீகர் யூனியன் பிரதேசங்களில் முழு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராம பக்தர்கள் வழிபட ஏதுவாக மத்திய அரசு அலுவலகங்கள் அரை நாள் மூடியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தமிழகத்திலும் பொது விடுமுறை விட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஜனவரி 22-ம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.