பிரதமர் மோடியின் இன்றைய பயணத் திட்டம்... தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் வழிபடுகிறார்!


தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். இன்று அவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர சிறப்பு வாய்ந்த தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் இடம் மற்றும் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்ய உள்ளார்.

நேற்று ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். அதைத்தொடர்ந்து இன்று காலை 8.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 9.30 மணியளவில் அரிச்சல்முனை கடலில் புனித நீராடுகிறார். அதன் தொடர்ச்சியாக கடல்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கி சிறப்பு பூஜை மற்றும் சங்கல்பம் மேற்கொள்கிறார்.

அதன்பிறகு காலை 10.15 மணிக்கு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யும் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். ராமாயணத்தில் விபிஷணருக்கு இலங்கை அரசராக ராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம் தனுஷ்கோடி என நம்பப்படுகிறது. அயோத்திக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள பந்தத்தை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி கோதண்ட ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி அரிச்சல்முனை, தனுஷ்கோடியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் வந்தடையும் பிரதமர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்கிறார். நாளை அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து அயோத்தி செல்லும் பிரதமர் அங்கு ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்கிறார்.

x