அயோத்தி ராமர் குடமுழுக்கு... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து புனித நீர் சேகரித்த இஸ்லாமியர்


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர்

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர், இஸ்லாமியர் ஒருவரின் உதவியால் இங்கிலாந்து வழியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக நாடு நெடுகிலும் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கள், நதிகள் என உள்நாடு மட்டுமன்றி சர்வதேச அளவிலும் அவை சேகரிக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சேகரிக்கப்பட்ட புனித நீரானது இஸ்லாமியர் ஒருவரது ஒருங்கிணைப்பின் உதவியால் இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

2019, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் வான்வழியாக புகுந்து பாலகோட் துல்லியத் தாக்குதலை மேற்கொண்டது. இந்த சம்பவங்களை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சேகரிக்கப்பட்ட புனித நீரை நேரடியாக இந்தியா கொண்டுவருவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே இங்கிலாந்து வழியாக சுற்றிக்கொண்டு புனித நீர் இந்தியாவை வந்து சேர்ந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது அங்குள்ளவர்களாலும், இந்தியர்களாலும் அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே பாவிக்கப்படுகிறது. எனவே இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிக நிகழ்வுகளில், பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தும் புனித நீர் கொண்டுவரப்படுவது தவிர்க்க முடியாததாக மாறியது. இந்த வகையில் அங்குள்ள சாரதா பீடம் அமைப்பை சேர்ந்தவர்களால் சேகரிக்கப்பட்ட புனித நீர் தன்வீர் அகமது மற்றும் அவரது குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. தன்வீர் அகமதுவால் இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர், அங்கிருந்து இங்கிலாந்தில் உள்ள அவரது மகள் மக்ரிபிக்கு அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 2023 -ல் இந்தியாவின் அகமதாபாத்திற்கு பயணப்பட்ட சோனல் ஷெரிடம் அதை மாக்ரிபி ஒப்படைத்தார். இந்த வகையில், டெல்லியை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் செயற்பாட்டாளர்களிடம் இந்த புனித நீர் பத்திரமாக சென்று சேர்ந்தது. இந்த நடைமுறை புதிதும் அல்ல. முன்னதாக சிருங்கேரி சங்கராச்சாரியாரால் சாரதா கோவில் குடமுழுக்கு வைபவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றபோதும் இதே போன்று இங்கிலாந்து மார்க்கமாக, இஸ்லாமியர்கள் உதவியோடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசத்தின் புனித நீர் இந்தியா வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானத்தின் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்!

x