பழனி தைப்பூச திருவிழாவுக்கு குன்றக்குடியில் இருந்து 450 ஆண்டுகளுக்கு மேலாக செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த நகரத்தார்களும் (நாட்டுக்கோட்டை செட்டியார்கள்), நாட்டார்களும் காவடி எடுத்துக் கொண்டு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வழக்கத்தின்படி இந்த ஆண்டும் அவர்கள் தங்கள் காவடிப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கனாடுகாத்தான், கண்டனூர் உள்பட 96 ஊர்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் விரதமிருந்து காவடி எடுத்து நேற்று முன்தினம் குன்றக்குடி வந்தடைந்தனர்.
அங்கு நேற்று காலை வைரவேல் பூஜை, அரண்மனை பொங்கல் முடித்து சாமியாடி தலைமையில் காவடிகள் தூக்கிப் புறப்பட்டனர். குன்றக்குடி மயிலாடும்பாறையில் காவடி ஆட்டம் ஆடி தங்கள் பாதயாத்திரையை துவங்கினர். இந்த காவடிகள் தைப்பூசத்தின் முதல் நாள் ஜனவரி 24-ம் தேதி பழனியை சென்றடையும். அங்கு பழனி முருகனுக்கு காவடி செலுத்திவிட்டு மீண்டும் ஊர் திரும்புவார்கள். பெண்களும் விரதமிருந்து காவடி எடுத்துச் செல்லும் வழக்கமும் உண்டு.
காவடி எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் பாதயாத்திரையாகவே தான் காவடி சுமந்து சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்பது ஐதீகம். அந்தக் காலத்தில் அதுதான் வழக்கமாகவும் இருந்திருக்கிறது. காவடிகளை கண்ட இடத்தில் வைக்கக் கூடாது என்பதாலேயே இந்த ஏற்பாடு. ஆனால், காலப்போக்கில் இது மாறிவிட்டது.

இப்போதெல்லாம் காவடி எடுத்துச் செல்லும் பெரும்பாலான நபர்கள் காவடியைச் செலுத்தியதும் கார்கள், பேருந்துகளில் சொந்த ஊர் திரும்பிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் அவர்களின் காவடியை பழனியிலிருந்து குன்றக்குடி வரை பாதயாத்திரையாகவே எடுத்து வருகிறார்கள். அவர்கள் குன்றக்குடி வந்தடைந்ததும் அர்களிடம், காவடிக்கு உடையவர்கள் காவடியைப் பெற்று அங்கே மகேஷ்வர பூஜயை முடித்து மீண்டும் கால்நடையாக சொந்த ஊருக்குத் திரும்பி விரதம் முடிக்கிறார்கள்.

கரோனா காலத்தை தவிர மற்ற ஆண்டுகளில் இவர்கள் பழனிக்கு யாத்திரை செல்லாமல் இருந்தது கிடையாது. இவர்களது யாத்திரையின் போது வழிநெடுகிலும் இவர்களுக்கு உணவு, தண்ணீர், பழங்கள், பிஸ்கட்டுகள் ஆகியவற்றை உபயதாரர்கள் தாராளமாக வழங்கி வருவதும் தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உதயநிதி குறித்த இரட்டை அர்த்த பேட்டி: மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டம்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வைரமுத்து குரலில் 'டீப் ஃபேக்' வீடியோ: பொறியாளர் கைது!