மௌத் ஆர்கன் வாசித்து வரவேற்ற ஆண்டாள்... மெய்மறந்து ரசித்த பிரதமர்!


பிரதமருக்காக மௌத் ஆர்கன் வாசிக்கும் ஆண்டாள்

ஸ்ரீரங்கம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், மௌத் ஆர்கன் வாசித்து வரவேற்பு கொடுத்தது. அதை அவர் மெய்மறந்து ரசித்தார்.

ஸ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ராமாயணம் தொடர்புடைய பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அந்தவகையில் இன்று 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வந்தார்.

சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஶ்ரீரங்கம் சென்றார். கொள்ளிடக்கரையில் இருந்து காரில் மக்களுக்கு கையசைத்தவாறு ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்த பிரதமர் மோடி, சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார். ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்த அவர் புகழ்பெற்ற கம்பராமாயண மண்டபத்திற்குச் சென்றார்.

அங்கு அவருக்காக கம்பராமாயண பாராயணம் நடைபெற்றது. அதனை அமர்ந்து சிறிது நேரம் கேட்டார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார். பின் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் அருகில் சென்று ஆசி பெற்றார். அப்போது யானைப் பாகன், ஆண்டாள் யானையிடம் மெளத் ஆர்கன் கொடுத்து வாசிக்கச் சொன்னார். ஆண்டாள் அதை மோடிக்கு அழகாக வாசித்துக் காட்டியது.

ஆண்டாள் யானையின் இசையை பிரதமர் ரசித்துக் கேட்டார். அதன் தும்பிக்கையை தடவிக்கொடுத்து தனது அன்பை அவர் வெளிப்படுத்தினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x